Published : 25 Aug 2021 05:14 PM
Last Updated : 25 Aug 2021 05:14 PM

மதுரையில் மாணவர்களுக்கு ரூ.500 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு: சு.வெங்கடேசன் எம்.பி. 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சு.வெங்கடேசன் எம்.பி. தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், முதன்மை வங்கி மேலாளர்கள் பங்கேற்றனர். 

மதுரை 

மதுரை மாவட்டத்தில் உள்ள பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி கற்கும் வகையில் ரூ.500 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிளஸ் 2 மாணவர்கள் உயர் கல்வி கற்க கல்விக் கடன் வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மத்திய அரசின் கல்விக்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் எம்.பி., ஆட்சியர் எஸ்.அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், முதன்மை வங்கி மேலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்திற்குப் பின்னர், சு.வெங்கடேசன் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’நாடாளுமன்றக் கல்விக்குழு உறுப்பினர் என்ற முறையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பிளஸ் 2 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்குவதற்கான முதல் ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக ஆய்வுகள் நடத்தி சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டில் 400 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்த 42 ஆயிரம் மாணவர்களில் 50 சதவீதம் பேர் உயர் கல்விக்குச் செல்கின்றனர். இவர்கள் உயர் கல்வி கற்க ரூ.500 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்குக் கல்விக் கடன் கொடுப்பது குறைந்துள்ளது. இது கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களின் கல்விக் கனவை பாதித்துள்ளது.

எனவே அதிக மாணவர்கள் எளிதில் கல்விக் கடன் பெற ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு அலுவலர், வட்டார அளவில் ஒருங்கிணைப்பாளர்கள், மாநகராட்சிப் பகுதியில் 4 மண்டலப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் வழிகாட்டும் சேவை மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு வங்கியின் சார்பிலும் பொறுப்பாளர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x