Published : 24 Aug 2021 01:28 PM
Last Updated : 24 Aug 2021 01:28 PM
கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் என அனைவருக்கும் கட்டாயத் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செலுத்திக் கொள்ளாத ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகள் அனைத்தும் செப்டம்பர் 1-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், கோவை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், கல்லூரிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில் கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’1. அனைத்துக் கல்லூரிகளும் தங்கள் கல்லூரிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டுக் கருவிகள், ஆய்வகங்கள் போன்றவற்றைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
2. கட்டாயமாக அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பணியாளர்கள் (ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள்) கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர்.
3. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் (மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள்) விவரங்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும், அரசு கோரும்போது உடன் வழங்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.
4. கோவிட் - 19 சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகளில் இணையவழி வகுப்புகளையே தொடர விரைவில் முடிவு செய்யப்படும்.
5. பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் கூட்டி பெற்றோர்களின் ஆலோசனையைப் பெறல் வேண்டும்.
6. சுகாதாரத்துறை அலுவலர்களைத் தொடர்புகொண்டு, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்குக் கல்லூரியிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.
7. நோய்த்தொற்று அறிகுறி உள்ள மாணவர்களைக் கண்டறிந்தால், உடன் அவருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் ஆர்டி- பிசிஆர் சோதனை எடுக்க வேண்டும்.
8. மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தர வேண்டிய அவசியமில்லை.
9. கல்லூரி வளாகத்தினுள் பயன்படாத பிளாஸ்டிக் கப், தேநீர் கப், டயர்கள், விஷ ஐந்துக்கள் தஞ்சமடையும் இடங்களை உடன் அப்புறப்படுத்த வேண்டும்.
10. நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழிகளில் கண்காணிப்புக் குழு அமைத்து, வழிகாட்டு நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
11. சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்.
12. கல்லூரி தொடங்குவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே கல்லூரி வளாகத்தினைச் சுத்தம் செய்திட முன்னேற்பாடுகளைச் செய்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது’’.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT