Published : 23 Aug 2021 08:57 PM
Last Updated : 23 Aug 2021 08:57 PM
மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் காய்ச்சல், சளி, இருமல் என கரோனா அறிகுறியுடன் வரும் மாணவர்களைத் தனிமைப்படுத்த அவர்களுக்குத் தனி அறை ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
வரும் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 9 முதல் 12 வரை உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி ஆணையர் கேபி.கார்த்திகேயன் தலைமை வகித்துப் பேசும்போது, ’’ஒவ்வொரு பள்ளியிலும் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளி வளாகத்தில் நுழைவுவாயில் அருகில் மாணவ, மாணவிகள் கைகளைக் கழுவுவதற்கு வசதியாக கைகளைக் கழுவுமிடம் ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் வரும் மாணவ, மாணவிகள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அனைத்து மாணவ, மாணவிகளையும் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்தபிறகே அனுமதிக்க வேண்டும். அவசரத் தேவைக்குகேற்ப முகக்கவசங்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
மாணவ, மாணவிகளை அரசு அறிவுரைகளின்படி வரவழைத்து வகுப்புகள் நடத்த வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் அம்மாணாக்கரைத் தனிமைப்படுத்தத் தனி அறை ஏற்படுத்த வேண்டும். அவர்களை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோருடன் அனுப்பிட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் நகரப் பொறியாளர் (பொ) சுகந்தி, கல்வி அலுவலர் பொ.விஜயா, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மண்டல உதவி செயற்பொறியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT