Last Updated : 23 Aug, 2021 08:07 PM

1  

Published : 23 Aug 2021 08:07 PM
Last Updated : 23 Aug 2021 08:07 PM

நாட்டிலேயே முதல்முறையாக கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கை அமல்

பெங்களூரு

நாட்டிலேயே முதல்முறையாக கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மை தெரிவித்தார்.

இதுதொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து விழாவில் முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மை பேசியதாவது:

''புதிய கல்விக் கொள்கையை வெற்றிகரமாக்க வேண்டுமெனில், அதை மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். புதிய டிஜிட்டல்மயமாக்கப்பட்ட கொள்கையைக் கல்விக்கென உருவாக்க வேண்டும். தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களின் உதவியுடன் இது ஒவ்வொரு கிராமத்திலும் சாத்தியமாக்கப்பட வேண்டும்.

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட திட்டத்தின்கீழ் பட்டப்படிப்பு அளவிலான மாணவர்களுக்கு ஐபாட் வழங்கப்படும். கலபுர்கியில் தொடக்க மற்றும் இடைநிலை கல்விக்குழு உருவாக்கப்பட வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையின்படி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பெங்களூருவில் 180 ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்ட மையங்கள் உள்ளன. ஆனால் அவற்றுக்கும் மாணவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இந்த நிலை மாற்றப்படும்.

புதிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டம் ஒவ்வொரு கிராமமும் பள்ளியும் பல்கலைக்கழகமும் அணுகும் வகையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு கன்னடிகாவும் அறிவு சார்ந்தவராக இருக்க வேண்டும்.

நம் நாட்டைப் பல்வேறு நபர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர். ஆனால் அமைப்பில் அடிப்படை மாற்றத்தைச் செய்ய சிலரால் மட்டுமே முடியும். புதிய கல்விக் கொள்கை அந்த அடிப்படை மாற்றத்தைச் செய்திருக்கிறது''.

இவ்வாறு கர்நாடக முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x