Last Updated : 18 Aug, 2021 08:41 PM

1  

Published : 18 Aug 2021 08:41 PM
Last Updated : 18 Aug 2021 08:41 PM

செல்போன் இல்லாத மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்: தேசிய விருதுக்குத் தேர்வான திருச்சி ஆசிரியை பேட்டி

திருச்சி

செல்போன் இல்லாத மாணவ - மாணவிகளின் வீடுகளுக்குச் சுழற்சி முறையில் பள்ளி ஆசிரியர்கள் சென்று பாடம் நடத்தி வருவதாகத் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட திருச்சி மாநகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.

பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தினமான செப்.5-ம் தேதி டெல்லி, விக்யான் பவனில் குடியரசுத் தலைவர் கையால் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும். நிகழாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களில் திருச்சி மாவட்டம் பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கே.ஆஷாதேவிவும் ஒருவர்.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் ஆஷா தேவி கூறியது:

''2013-மாநில நல்லாசிரியர் விருது பெற்ற எனக்கு தற்போது தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 1988-ல் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து, 2003-ல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராகவும், 2009-ல் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு கிடைத்தது.

2010-ல் பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றபோது, பள்ளியில் 71 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை தற்போது 816 ஆக உள்ளது. இதற்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தியதும், மாணவர்களுக்குக் கல்வியைத் தாண்டி ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, சிலம்பம், யோகா, கணினி, கராத்தே உட்பட 10-க்கும் அதிகமான தனித்திறன் பயிற்சிகளை வழங்கியதும் காரணம். இதனால், பல்வேறு போட்டிகளிலும் எங்கள் பள்ளி மாணவ- மாணவிகள் பரிசுகளை சிறப்பிடம் பெற்று வருகின்றனர். இதனால், குழந்தைகளின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் பள்ளி நிர்வாகத்துக்குத் தேவையான முழு ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர்.

கரோனா காலத்தில் ஆன்லைன் மூலமாகவும், 15 வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பாடங்களைப் பதிவேற்றியும் வகுப்புகளை நடத்தி வருகிறோம். செல்போன் இல்லாத மாணவ- மாணவிகளின் வீடுகளுக்குச் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் சென்று பாடம் நடத்தி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தனியார் பள்ளிகளில் இருந்து 526 பேர் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

தற்போது பள்ளிக்குக் கூடுதல் இடவசதி கேட்டும், பள்ளியைத் தரம் உயர்த்தவும் வேண்டி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மூலம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்''.

இவ்வாறு ஆசிரியர் ஆஷா தேவி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x