Published : 18 Aug 2021 04:04 PM
Last Updated : 18 Aug 2021 04:04 PM
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை வணிக மேலாண்மை மற்றும் பன்னாட்டு வணிக மேலாண்மை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மைப் படிப்புகள் (எம்.பி.ஏ.) வழங்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில் படித்து முடித்த மாணவர்கள் உலகின் தலைச்சிறந்த தொழில் நிறுவனங்களைத் தோற்றுவிப்பவர்களாகவும், அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நடப்புக் கல்வியாண்டுக்கான சேர்க்கை குறித்த கூடுதல் விவரத்தைப் பல்கலைக்கழக நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, ''2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான மேலாண்மைத் துறை சார்பில் வழங்கப்படும் முதுகலை வணிக மேலாண்மை மற்றும் பன்னாட்டு வணிகத் துறை சார்பில் வழங்கப்படும் முதுகலை பன்னாட்டு வணிக மேலாண்மை ஆகிய படிப்புகளுக்கு இந்திய மேலாண்மை நிறுவனம் சார்பில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு (CAT) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
தற்போது மேற்சொன்ன படிப்புகளில் சேர்ந்து பயில புதுச்சேரி பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு மூலமும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இக்கல்வியாண்டில், மாணவர்கள் சேர்க்கையானது முதலில் இந்திய மேலாண்மை நிறுவனம் சார்பில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட்டு, மீதமுள்ள காலி இடங்கள், புதுச்சேரி பல்கலைக்கழகப் பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படும். இதற்கு, மாணவர்கள் வருகின்ற 27-ம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைக் காணலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT