Published : 12 Aug 2021 12:08 PM
Last Updated : 12 Aug 2021 12:08 PM
பள்ளி மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஆக. 12) அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"மாவட்ட நூலகங்களின் தேவைகள், அதன் கட்டிடங்களின் நிலை, புதிய கட்டிடங்கள் தேவைப்படுகிறதா, இருக்கும் புத்தகங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்கிற ஆய்வறிக்கையை அதிகாரிகளிடம் கேட்டோம். அதனைக் கொடுத்துள்ளனர். நூலகங்களை எந்தெந்த வகையில் மேம்படுத்தலாம், முதல்வரின் வழிகாட்டுதலின்படி தேவைகளைச் சரிசெய்யும் நடவடிக்கையில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம்.
செப். 01 முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். ஒரு வகுப்பில் 40 பேர் இருந்தால் 50%, அதாவது 20 பேர் ஒரு நாளும், மற்ற 20 பேர் மறுநாளும் வருவதுதான் சுழற்சி முறை வகுப்புகள். இதுகுறித்த விவாதம் தொடக்க நிலையில் உள்ளது. அதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகள், பள்ளிகளின் தயாரிப்புகள் எப்படி இருக்க வேண்டும், முன்னேற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டும் பள்ளிகள் திறப்புக்கான வழிமுறைகளைக் கொடுத்துள்ளனர். அதில் ஏதேனும் திருத்தங்கள் வேண்டுமா என்பதை ஆலோசித்து, உரிய அறிவிப்பு வெளியிடப்படும்.
நவ. 9-ம் தேதியிலிருந்து நீட் தேர்வுக்கான பயிற்சிகள், ஒவ்வொரு நாளைக்கும் ஒரு பாடம் என்ற வகையில் அளிக்கப்பட்டு வருகின்றன. ஜேஇஇக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆன்லைன் மூலம் மாணவர்களின் சந்தேகங்களும் தீர்க்கப்படுகின்றன. நீட் தேர்வு விலக்கு என்ற நிலையில்தான் அரசு இருக்கிறது. அதனால்தான், ஏ.கே.ராஜன் கமிட்டி உள்ளிட்ட சட்ட போராட்டங்களைத் தமிழக அரசு செய்து வருகிறது".
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT