Published : 10 Aug 2021 06:22 PM
Last Updated : 10 Aug 2021 06:22 PM
கரோனா சூழலிலும் சான்றிதழ்களை பெற பெற்றோருடன் நீண்ட வரிசையில் மாணவ, மாணவிகள் காத்திருக்கும் சூழல் ஆண்டுதோறும் தொடர்கிறது. கூடுதல் அதிகாரிகளை நியமித்து பணிகளை அரசு விரைவுப்படுத்துமா என்ற கேள்வியுடன் பலரும் காத்துள்ளனர்.
புதுச்சேரியில் வருவாய்த் துறை மூலம் வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த வருவாய் மற்றும் குடியிருப்புச் சான்றிதழ்கள் (PIC FORM. Permanent Integrated Certificate ) 2017-ம் ஆண்டு முதல் ரத்து செய்யபட்டுள்ளன. மருத்துவம் படிக்க, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க மாணவர்கள் ஆன்லைன் மூலம் புதிதாக 2021-22 ஆண்டில் எடுக்கப்பட்ட சாதி, குடியிருப்புச் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இதனால் வருவாய்த்துறை அலுவலகங்களை நாடும்போது, அங்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அதிகாரிகள் குறைந்தளவே உள்ளதால் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலர் ராஜாங்கம் கூறுகையில், "ஆட்சியரிடம் இதுபற்றி மனு தந்துள்ளோம். 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும்போதெல்லாம் சான்றிதழுக்காக மாணவ, மாணவிகளும் பெற்றோரும் வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு அலைய வேண்டியுள்ளது.
சிறிய இடத்தில் 200 பேர் வரை தினந்தோறும் கரோனா காலத்தில் ஒன்றுகூட வேண்டியுள்ளது. அதே நேரத்தில் விஏஓ, ஆர்ஐ மற்றும் உரிய அதிகாரிகள் அலுவலகங்களில் இல்லாத சூழலும் நிலவுகிறது. சான்றிதழ் தரத் தனியாக முகாம் நடத்தலாம் அல்லது பள்ளிகளிலேயே தர ஏற்பாடு செய்யலாம். மக்களை அலைக்கழிக்கும் போக்கை நிறுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்துப் புதுச்சேரி சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி கூறுகையில், "வருவாய்த் துறையில் கூடுதல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அல்லது படிப்பு சம்மந்தமாக மட்டும் சான்றிதழ்கள் வழங்கத் தனி அதிகாரிகளை நியமித்து விரைவாக சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் சாதி மாறப்போவதில்லை ஆகவே நேர விரயத்தைக் குறைக்க ஆயுள் முழுவதும் பயன்படுத்தும் நிரந்தர சாதிச் சான்றிதழ்களை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சாதிச் சான்றிதழ்களை எடுக்கச் சொல்லி நிர்பந்திக்க கூடாது என்ற அரசு ஆணையாக வெளியிட்டு, விரைவாகச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களை அலைக்கழிக்காமலும், நேரத்தைக் குறைக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும், வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் ஆன்லைனில் பதிவு செய்தாலும் நேரடியாகச் சென்று கூட்ட நெரிசலில் நீண்ட நேரம் நின்று, அதிக நாட்கள் அலைந்துதான் சான்றிதழ்களைப் பெற வேண்டிய நிலைமை உள்ளது. புதுச்சேரி அரசு உடனடியாக கவனம் செலுத்தி மக்களும் மாணவர்களும் சிரமம் இல்லாமல் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சான்றிதழ்கள் பெறுவதற்கு மாணவர்களும், மக்களும் அதிகளவில் கூடுவதால் மக்களுக்கும், மாணவர்களுக்கும், பணிபுரியும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கரோனா பரவும் சூழ்நிலை உள்ளது" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT