புதுச்சேரி பல்கலை. மேம்பாட்டுக்கு காரைக்கால், மாஹேயில் கூடுதல் நிலம்: ஆளுநரிடம் துணைவேந்தர் வலியுறுத்தல்

புதுச்சேரி பல்கலை. மேம்பாட்டுக்கு காரைக்கால், மாஹேயில் கூடுதல் நிலம்: ஆளுநரிடம் துணைவேந்தர் வலியுறுத்தல்
Updated on
1 min read

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் மைய மேம்பாட்டுக்கும், மாஹேயில் சமுதாயக் கல்லூரி கட்டவும் நிலம் தேவை என்று ஆளுநரிடம் துணைவேந்தர் கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரி அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று ஆளுநர் உறுதி தந்துள்ளார்.

புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங், துணைநிலை ஆளுநரும் புதுவை பல்கலைக்கழகத் தலைமைக் காப்பாளருமான தமிழிசையைச் சந்தித்துப் பேசினார்.

அப்பொழுது துணைவேந்தர், "புதுவை பல்கலைக்கழகத்தின் காரைக்கால் மைய மேம்பாட்டிற்குக் கூடுதலாக 15 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும்., அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அருகில் மாணவர்களுக்கான புதிய தங்கும் விடுதிகள் கட்ட 3 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். ஜிப்மர் விரிவாக்க வளாகத்திற்கு அருகாமையில் பல்கலைக்கழக சமுதாய கல்லூரி ஊழியர்கள் தங்கும் வகையில் 8 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். மாஹே பிராந்தியத்தில் பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியின் புதிய கட்டுமானங்களுக்கு 2 ஏக்கர் நிலம் தரவேண்டும்" என்று துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் கோரிக்கை விடுத்தார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை, மாணவர்களின் நலன் மற்றும் புதுவையைக் கல்வி கேந்திரியமாக உருவாக்கும் நோக்கிலும், உலகின் தலைசிறந்த ஆராய்ச்சி உயர் கல்வி நிறுவனமாக புதுவை பல்கலைக்கழகத்தை உருவாக்க புதுவை அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்தார்.

பல்கலைக்கழகத்தில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கை இம்மாத இறுதியில் நேரில் வந்து திறந்து வைப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது பல்கலைக்கழக இயக்குநர் பேராசிரியர் பாலகிருஷ்ணன், பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் சித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in