Published : 04 Aug 2021 06:49 PM
Last Updated : 04 Aug 2021 06:49 PM

நீட் 2021 தேர்வுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு நீட்டிப்பு

நர்ஸிங் மாணவர்களின் நலன் கருதி, 2021-ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கரோனா பரவலால் கடந்த ஆண்டு நீட் தேர்வு பல முறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப்.13-ம் தேதி நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 2021-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 12-ம் தேதி கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 13 மாலை முதல் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், காலக்கெடுவை ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நீட்டித்து தேசியத் தேர்வுகள் முகமை உத்தரவிட்டுள்ளது. பிஎஸ்சி நர்ஸிங் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.

அதேபோல நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இளங்கலை நீட் நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு முதல் முறையாக 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் நீட் தேர்வு எழுதுவோர் வசதிக்காக மத்தியக் கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்காகக் குவைத்தில் இந்த ஆண்டு புதிய தேர்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலால் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் எண்ணிக்கையும் உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x