Last Updated : 31 Jul, 2021 07:37 PM

 

Published : 31 Jul 2021 07:37 PM
Last Updated : 31 Jul 2021 07:37 PM

'கற்போம் எழுதுவோம்' இயக்கம்: புதுக்கோட்டையில் வயது வந்தோருக்கான தேர்வு நிறைவு

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டியில் நடைபெற்ற மதிப்பீட்டுப் பணியை ஆய்வு செய்கிறார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி.

புதுக்கோட்டை

'கற்போம் எழுதுவோம்' இயக்கத்தில் பயிற்சி பெற்று வந்த வயது வந்தோர்களுக்கான எழுத்தறிவு குறித்த மதிப்பீட்டு முகாம் இன்று (ஜூலை 31) நிறைவடைந்தது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் 15 வயதுக்கு மேற்பட்டோரில் எழுதப் படிக்கத் தெரியாதோருக்கு, 'கற்போம் எழுதுவோம்' இயக்கம் சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து எழுத்தறிவு, வாசிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், தமிழகம் முழுவதும் சுமார் 3.10 லட்சம் பேருக்கு பல்வேறு கட்டங்களாகப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. இதில், பெரும்பாலானோர் முதியோர்களாகவே உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 394 மையங்களில் முதற்கட்டமாக 7,900-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கூகைப்புளியான்கொல்லை அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மதிப்பீட்டு பணி முடிந்து தேர்வு அட்டையோடு வெளியே வந்த மூதாட்டிகள்.

இவர்களுக்குத் தன்னார்வலர்கள் மூலம் தினந்தோறும் 2 மணி நேரம் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், பயிற்சியின் நிறைவாக அனைத்து மையங்களிலும் மதிப்பீட்டு முகாம் ஜூலை 29-ம் தேதி தொடங்கியது.

முதியோர்களிடம் எழுத்தறிவு, வாசிப்புத் திறன் குறித்துச் சோதிக்கப்பட்டது. மையங்களுக்கு வராதோரிடம் அவர்களது வீடு, பணிபுரியும் இடத்துக்கே சென்றும் மதிப்பீட்டுப் பணி நடத்தப்பட்டது. இப்பணி, இன்றுடன் நிறைவடைந்தது. 100 சதவீதம் பேர் இத்தேர்வில் கலந்துகொண்டதாக கல்வித் துறையினர் தெரிவித்தனர். மதிப்பீட்டுப் பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x