Published : 31 Jul 2021 06:11 PM
Last Updated : 31 Jul 2021 06:11 PM
குரூப்-1 பணிகளுக்குத் தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டைக் கோர உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றுவது குறித்துத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்துத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''தேர்வாணையத்தால் 03.01.2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 (தொகுதி - 1ல்) அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுள் தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேர்வாணைய இணையதளத்தில் 05.08.2021 அன்று வெளியிடப்படவுள்ள உரிய படிவத்தில், 16.08.2021 முதல் 16.09.2021 வரை (வேலை நாட்களில்) ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்:
1. பள்ளி முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை
2. மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டயப் படிப்பு
3. பட்டப் படிப்பு
இதுகுறித்த தகவல் உரிய விண்ணப்பதாரர்களுக்கு அதாவது விண்ணப்பத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றதாகக் குறிப்பிட்டு முதல் நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும். இதைத் தவிர தேர்வாணைய இணையதளம் மூலமாகவும் இதுகுறித்த குறிப்பாணையினை 05.08.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது’’.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT