Published : 31 Jul 2021 01:04 PM
Last Updated : 31 Jul 2021 01:04 PM

ஆன்லைனில் டிஆர்பி தேர்வுகள்: கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு

ஆன்லைனில் ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகள் நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக ஆசிரியர் பதவிகளின் நேரடி நியமனங்கள் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இதுதவிர, நீதிமன்றங்களிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2 ஆண்டுகளாகத் தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை.

இதனால் ஆசிரியர் தேர்வு வாரியத்தைக் கலைத்துவிட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் பணி நியமனங்களை மேற்கொள்ளத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும் இதற்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆன்லைனில் ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு, கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதில், ''தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை ஆன்லைனில் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் என்எஸ்இஐடி (இந்தியாவில் அரசுகள், பல்கலைக்கழகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆன்லைன் தேர்வுகளை நடத்தித் தரும் நிறுவனம்) மூலம் நடைபெறும்.

இதற்காக அனைத்துக் கல்லூரி முதல்வர்கள் / செயலாளர்கள், தங்களின் வளாகத்தில் உள்ள கட்டமைப்பு வசதிகள், பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதன் மூலம், அந்தக் கல்வி நிறுவனத்தை ஆன்லைன் தேர்வு மையமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்ற விவரங்கள் தேவை.

குறிப்பாகக் கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகங்கள் மற்றும் பிற பெரிய கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் தேர்வு மையங்களாகப் பயன்படுத்திக் கொள்ளப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x