Last Updated : 30 Jul, 2021 11:59 AM

 

Published : 30 Jul 2021 11:59 AM
Last Updated : 30 Jul 2021 11:59 AM

அரியலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு மத்திய அரசின் பசுமை வளாக விருது

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு மத்திய அரசின் பசுமை வளாக விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக கல்வி கவுன்சில், இந்தியக் கல்வி அமைச்சகம் மற்றும் உயர் கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் நாட்டிலுள்ள கல்வி நிலையங்களில் பசுமை, தூய்மை ஆகியவற்றை ஆண்டு முழுவதும் சிறப்பாகப் பராமரித்தலில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்து பசுமை வளாக விருதை வழங்கி வருகிறது.

அந்த வகையில், நிகழாண்டு தமிழகத்தில் 34 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இந்த விருதுகளை மத்திய அரசு நேற்று (ஜூலை 29) வழங்கியது. அதில், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் இயங்கி வரும் அரசு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. விருதினை இணையவழி மூலம் மத்திய அரசு, மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வசம் வழங்கியது.

தொடர்ந்து, பயிற்சி நிறுவன முதல்வர் சா.மொழியரசியிடம் ஆட்சியர், விருதினை நேற்று மாலை வழங்கினார். நிகழ்ச்சியில் பயிற்சி நிறுவனப் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதியிடமிருந்து வருதை பெற்ற மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சா.மொழியரசி.

இதுகுறித்துப் பயிற்சி நிறுவன முதல்வர் சா.மொழியரசி கூறியபோது, "தமிழகத்திலிருந்து 34 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 33 இடங்களை தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்றுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மட்டும் அரசு சார்ந்த நிறுவனமாகும்.

நிறுவன வளாகத்தில் பசுமை, தூய்மை, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தல், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரித்தல், சுகாதாரமான வளாகம் மற்றும் சுத்தமான குடிநீர் உள்ளிட்டவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதற்காக பசுமை வளாக விருதினை இன்று இணையவழி மூலமாக மத்திய அரசு வழங்கியுள்ளது. இவ்விருதினைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், பயிற்சி நிலைய வளாகத்தை மேம்படுத்துவதற்கான ஆர்வத்தை இந்த விருது ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x