Published : 27 Jul 2021 11:53 AM
Last Updated : 27 Jul 2021 11:53 AM
தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், முதல்வரின் அறிவுறுத்தலின்படி முடிவுகள் வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை, அம்பத்தூர் பள்ளியொன்றில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
''தமிழ்நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள், தங்களின் பெரு நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியை அரசுப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். அரசுப் பள்ளிகள் என்பவை வறுமையின் அடையாளமாக இல்லாமல் பெருமையின் அடையாளமாக இருக்க வேண்டும். முதல்வரின் வழிகாட்டுதலின்படி நிச்சயம் அந்த அடையாளத்தை அடைவோம்.
நீட் தேர்வு சுகாதாரத் துறையின்கீழ் வருவதால், அதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து பதிலளித்து வருகிறார். நீட் தேர்வுக்கு விலக்கு என்பது திமுகவின் நிலைப்பாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழகத்தின் நிலைப்பாடுதான். சட்டப் போராட்டத்தின் மூலம் பிரச்சினை தீர்க்கப்படும்.
பிற மாநிலங்களில் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அங்கு விருப்பத்தின்பேரில் மாணவர்கள் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் பெற்றோருக்கு விருப்பமும், தைரியமும் வர வேண்டும். 3-வது, 4-வது கரோனா அலை குறித்தெல்லாம் பேச்சுகள் வருகின்றன. அதனால் எப்படிப் பள்ளிகளுக்கு அனுப்புவது என்ற பயத்தில் இருந்து அவர்கள் வெளியே வர வேண்டும்.
தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். முதல்வரின் அறிவுறுத்தலின்படி முடிவுகள் வெளியாகும். அப்போது முன்பைப் போலவே முறையான கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும்''.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT