Published : 26 Jul 2021 11:29 AM
Last Updated : 26 Jul 2021 11:29 AM
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவ, மாணவிகளுக்கு அனைத்துத் துறைகளிலும் 25 சத இட ஒதுக்கீடு தரலாம் என்ற ஆய்வுக்குழு அறிக்கை மத்தியக் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டு ஐந்து ஆண்டுகளாகப் பதில் வராத சூழல் நிலவுகிறது. இதற்கான ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்த புதுச்சேரி ஆளுநரும், கல்வியமைச்சரும் நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகம் கடந்த 1985-ல் தொடங்கப்பட்டபோது புதுச்சேரியைச் சேர்ந்தோர் படிக்க 25 சதவீத இடஒதுக்கீடு கோரப்பட்டது. பல்கலைக்கழகம் ஆரம்பித்த முதல் 10 ஆண்டுகளில் புதுச்சேரி மாணவர்களுக்கென்று தனி ஒதுக்கீடு எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால் காலப்போக்கில், புதுச்சேரி மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் பெரிதும் புறக்கணிக்கப்பட்டபோது, புதுச்சேரி மாணவர்களுக்கென்று தனி இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
இதனை உணர்ந்த அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ஞானம் பல்கலைக்கழக கல்விக் குழுவின் உத்தரவுபடி, புதுச்சேரி கலைக் கல்லூரிகளில் இல்லாத புதுவைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துப் பட்டமேற்படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு ஒதுக்கீடு அளித்து 1997-ம் ஆண்டு உத்தரவிட்டார். அன்றில் இருந்து இந்த இட ஒதுக்கீடு முறை அமலுக்கு வந்தது. அப்போது 8 படிப்புகளுக்கு வழங்கப்பட்ட இந்த ஒதுக்கீடு படிப்படியாக 18 படிப்புகளுக்கு வழங்கப்பட்டது. புதுச்சேரிப் பல்கலைக்கழகம் 2008-2012 ஆண்டுகளில் நிறைய படிப்புகளைத் தொடங்கியது. ஆனால், அவற்றில் இடஒதுக்கீடு அளிக்கத் தவறிவிட்டது.
இதையடுத்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில் அனைத்துப் படிப்புகளிலும் இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று பரிந்துரைத்தது. ஆனால் அதன்பிறகு வந்த துணைவேந்தர் இந்த முடிவை மத்தியக் கல்வித் துறையின் அனுமதிக்கு அனுப்பி வைத்தார். இந்தக் கோப்பை அனுப்பி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் அமைச்சகத்திடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை. முந்தைய புதுச்சேரி அரசும், எம்.பி.க்களும் இதில் கவனம் செலுத்தவில்லை என்ற புகாரும் உள்ளது.
இதுபற்றி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதுச்சேரி தலைவர் ஆனந்த் கூறுகையில், "புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் 66-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 18 பாடப்பிரிவுகளில் மட்டுமே புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு கோரிப் போராட்டங்கள் பல நடத்தினோம். இக்கல்வியாண்டுக்கான அறிவிப்பிலும் இடஒதுக்கீடு இல்லை" என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கூறுகையில், "புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மரில் 27 சதவீத இடஒதுக்கீடு புதுச்சேரி மாணவர்களுக்குத் தரப்படுகிறது. ஆனால் மத்தியப் பல்கலைக்கழகம் புதுச்சேரியைச் சேர்ந்தோரை நிராகரிக்கிறது. வேலைவாய்ப்பு உள்ள பாடப்பிரிவுகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு தரப்படுவதில்லை. பல்கலைக்கழக நிர்வாகக்குழுக் கூட்டத்திலேயே இடஒதுக்கீட்டை முடிவு செய்து அறிவிக்கலாம். ஆனால், மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என்கிறனர்.
தற்போது ஜிப்மரை விட புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கட்டணம் அதிகம். மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜக கூட்டணி அரசுதான் புதுச்சேரியில் அமைந்துள்ளதால் புதிய அரசு இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக ஆளுநரும், கல்வியமைச்சரும் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT