Published : 25 Jul 2021 06:54 PM
Last Updated : 25 Jul 2021 06:54 PM
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு நாளை முதல் ஆகஸ்ட் 24 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியின் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடக்க இருந்தது. கரோனா 2-வது அலை பரவலின் தீவிரம் காரணமாக, தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அரசு அறிவித்தது.
10, பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண்களில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது. மதிப்பெண் கணக்கீடு பணிகள் முடிந்த நிலையில், 8.06 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 26 முதல் (நாளை) ஆகஸ்ட் 24-ம் தேதி வரை, அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, பொறியியல் படிப்பில் 2021-22 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேருவதற்கான பணிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தொடங்கி உள்ளது.
அதன்படி, பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு நாளை (ஜூலை 26) முதல் www.tneaonline.org அல்லது www.tndte.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24 வரையில் விண்ணப்பிக்கலாம்.
ஆக.25-ம் தேதி ரேண்டம் எண் வெளியாகும்.
செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
செப்.7 முதல் அக்.4 வரை கலந்தாய்வு நடைபெறும்.
அக். 20-ம் தேதிக்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT