Published : 23 Jul 2021 05:09 PM
Last Updated : 23 Jul 2021 05:09 PM
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தகுதிக்குறைவான பேராசியர்கள் நீக்கப்படுவார்கள் என, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 23) ஊரக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர், கஞ்சனூர், வெங்கந்தூர், வீரமூர், மங்களபுரம், கக்கனூர், காணை ஆகிய கிராமங்களில், புதிய பணிகளைத் தொடங்கிவைத்தும், முடிக்கப்பட்ட பணிகளைத் திறந்தும் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, கக்கனூர் கிராமத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் முடிவு குறித்து அவர் விளக்கமளித்ததாவது:
"ஜெயலலிதா பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? அது பெயரளவில்தான் உள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை இணைப்புப் பல்கலைக்கழகமாக மாற்றியுள்ளோம். அதிமுக ஆட்சியில் கருணாநிதி தொடங்கிவைத்த சட்டப்பேரவை வளாகத்தையே மாற்றவில்லையா? ஜெயலலிதா பல்கலைக்கழகம் என அறிவித்தார்கள், அவ்வளவுதான். தொடங்கிவைத்தார்கள் என்று சொல்ல முடியாது.
பெயர் வைப்பது அதிமுகவினருக்கு ஃபேஷன். அண்ணாமலை பல்கலைக்கழத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. விழுப்புரத்தின் வளர்ச்சிக்கு திமுக காரணமாக உள்ளது. ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்றது என்று சட்டப்பேரவையில் துரைமுருகன் குரல் கொடுத்துள்ளார். உயர்கல்வியின் வளர்ச்சியைக் கருதியே இது செய்யப்பட்டுள்ளதே தவிர பெயருக்காகச் செய்யப்பட்டது அல்ல.
அண்ணாமலை பல்கலைக்கழக ஊழலை விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் இது வந்துவிட்டால் எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லாத அளவுக்கு இந்த அரசு செயல்படும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணமே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிக் குறைவானவர்களாக நியமிக்கப்பட்ட பேராசியர்கள் குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நீக்கப்பட்டு முறையாக சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் எனச் சொல்லியுள்ளோம். முதலில் டிஆர்பியில் நேர்முகத் தேர்வு நடத்தப்படவில்லை. கவுரவப் பேராசியர்களை நியமிக்க கமிட்டி போடப்பட்டதே தவிர, டிஆர்பியோ, டிஎன்பிஎஸ்சியோ நியமிக்க வேண்டும் என்று செய்யவில்லை. அதனால் அந்த நியமனத்தையும் நிறுத்தி வைத்துள்ளோம். இவையெல்லாம் பட்ஜெட் வரும்போது அறிவிக்கப்படும்".
இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.
அப்போது எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT