Published : 22 Jul 2021 07:34 PM
Last Updated : 22 Jul 2021 07:34 PM
புதுவைப் பல்கலைக்கழகம் சார்பில் நிகழ் கல்வியாண்டு முதல் லட்சத் தீவுகளில் புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படிப்புகளுக்கான தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்குகின்ற விழா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கொள்கை அளவிலான அனுமதிக் கடிதங்களை வழங்கினார். லட்சத்தீவு நிர்வாகம், தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச் செயலர் விஜேந்திர சிங் ராவத் மற்றும் கல்வி அதிகாரி சித்திக் அலி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அதன்படி லட்சத் தீவுகளில் உள்ள காட்மேட் மற்றும் மினிகாய் தீவுகளில் சுற்றுலா மற்றும் சேவை, மென்பொருள் துறைகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளும், உணவு பரிமாறுதல் மற்றும் விருந்தோம்பல், கடல் பொறியியல், மின்சாரம், மின்னணு மற்றும் இயந்திரவியல் ஆகிய துறைகளில் தொழிற்கல்விச்சார்ந்த புதிய பட்டயப் படிப்புகள் நிகழாண்டு (2021 - 2022) முதல் புதியதாகத் தொடங்கப்பட்டுள்ளன.
முன்னதாக நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங், "கடலோரத் தீவுகளில் வசித்து வருகின்ற பழங்குடியின மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டே புதிய இளநிலைத் தொழில் மற்றும் பட்டயப் படிப்புகள் இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கடலோரத் தீவுகளில் வசித்து வருகின்ற இளைஞர்களிடம் திறன்களும், இயற்கை வளங்கள் குறித்த அறிவாற்றலும், தன்னம்பிக்கையும் உள்ளன. இந்நிலையில் புதிய தொழில் சார்ந்த படிப்புகளை உருவாக்குவதன் வாயிலாக மாணவர்களின் திறன்கள் மேம்படுகின்றன. மனித ஆற்றலைக் கல்வி முறைக்குள் கொண்டு வருவதால் தீவுகளில் வசிக்கும் மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கும், சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்கும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் வாய்ப்புகளில் உருவாக்கித் தரப்படுகின்றன. இந்த வாய்ப்புகளைத் தீவுப்பகுதிகளில் வசித்து வருகின்ற மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு முன்னேறி கல்வித்துறையில் சாதித்து இந்தியாவிற்குப் பெருமையைத் தேடித்தர வேண்டும்" என்று தெரிவித்தார்.
நிகழ்வின்போது புதுச்சேரி பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி பேராசிரியர் சிவராஜ், பல்கலைக்கழகக் கல்லுாரி மேம்பாட்டுக் குழு புல முதன்மையர் (பொறுப்பு) சந்திரசேகர ராவ், பதிவாளர் முனைவர் சித்ரா, அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கான கல்வி மைய இணைப்பு அதிகாரி ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT