Published : 22 Jul 2021 12:53 PM
Last Updated : 22 Jul 2021 12:53 PM

12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழை இன்று (ஜூலை 22) காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

கரோனா 2-வது அலை காரணமாக 2020- 21ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. அதையடுத்து 10, பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண்களில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டது.

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 19-ம் தேதி வெளியாகின. பிளஸ் 2 மதிப்பெண்களை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். இதில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர்கள் அனைவரும் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழை இன்று (ஜூலை 22) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு, https://apply1.tndge.org/senior-secondary-regular-provisional-marksheet-10102020 என்ற இணைய முகவரியில் தங்களின் மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x