Last Updated : 20 Jul, 2021 08:42 PM

 

Published : 20 Jul 2021 08:42 PM
Last Updated : 20 Jul 2021 08:42 PM

திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட மூவர் பிளஸ் 2 தேர்வில் 80%-க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி

கோவை

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த 3 பேர் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்ட கோவை மாவட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

''தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் மூலம் உழைக்கும் சிறார்களை மீட்டு அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி மையங்களில் இரண்டு ஆண்டுகள் கல்வி அளிப்பதோடு, முறைசார்ந்த பள்ளிகளில் சேர்ந்து தொடர்ந்து படிப்பதற்குத் தேவையான உதவிகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 10-ம் வகுப்பு முடித்தவர்கள் தொழிற்கல்வி, பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து கல்வி பயிலத் தமிழக அரசின் மூலம் கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அதேபோல, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பயிற்சி, பொறியியல் படிப்பதற்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின்பேரில் வழங்கப்படுகிறது. கடந்த 2013- 14ஆம் ஆண்டுகளில் மீட்கப்பட்ட 13 குழந்தைத் தொழிலாளர்கள் கடந்த கல்வியாண்டில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தேர்வு எழுதினர்.

இதில், எஸ்.அபிநயா, இ.கிருபாவதி, என்.நாகலட்சுமி ஆகிய மூன்று மாணவிகள் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 13 மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர், தொடர்ந்து அவர்கள் உயர்கல்விப் படிப்புகளுக்காகக் கல்லூரிகளில் சேரத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தங்கள் பகுதியில் குழந்தைத் தொழிலாளர்கள் யாரேனும் இருந்தால் 0422-2305445 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

மேலும், மத்திய அரசின் www.pencil.gov.in என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம்''.

இவ்வாறு டி.வி.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x