Published : 20 Jul 2021 08:33 PM
Last Updated : 20 Jul 2021 08:33 PM
அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையைக் களையும் வகையில் ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு மிக விரைவில் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி, சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மேம்படுத்தப்பட்ட வகுப்பறைக் கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறையைக் களையும் வகையில் ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், கரோனா காரணமாக வழக்கமாக நடைபெறும் ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. தற்போது கரோனா ஊரடங்கு தளர்வையொட்டி ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து, நிர்வாகப் பணியில் ஈடுபடலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதன் தொடர்ச்சியாக ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும் முதல்வரின் உத்தரவின்படி மிக விரைவில் நடத்தப்படும். கல்வித் தொலைக்காட்சிக்குக் கூடுதல் சேனல்களைத் தொடங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 வகுப்பில் கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள், அக்டோபர் மாதம் தேர்வெழுதலாம் என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். அப்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு கரோனா கட்டுக்குள் வந்தால் மட்டுமே அந்தத் தேர்வும் நடத்தப்படும். சிறப்புத் தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு, முதல்வரிடம் ஆலோசனை கேட்டு சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.
தனித் தேர்வர்களுக்குத் தேர்வு நடத்துவது தொடர்பாக கரோனா சூழலை ஆய்வு செய்து, மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகே முடிவு செய்யப்படும். பிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 22-ம் தேதி மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்''.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் உட்படக் கல்வித் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT