Published : 19 Jul 2021 06:24 PM
Last Updated : 19 Jul 2021 06:24 PM
புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் படிப்போருக்கு மருத்துவப் படிப்புகளில் பத்து சதவீத இடங்கள் வழங்குவது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வென்று ஆட்சியமைத்த பின்பு அமைச்சர்களுக்கு அண்மையில் துறைகள் ஒதுக்கப்பட்டன. அதையடுத்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளுக்குச் சென்று ஆய்வினைத் துறை அமைச்சர்கள் மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி இன்று புதுச்சேரி கல்வித் துறைக்குக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வந்தார். அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனை தொடர்பாக அவர் கூறுகையில், "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரிக்குத் தனிக்கல்வி வாரியம் அமைப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம்.
புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் படித்தோருக்கு மருத்துவக் கல்லூரிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகவும், கல்வி உரிமைச் சட்டத்தில் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இலவசக் கல்வி, ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு உட்படப் பல பிரச்சினைகள், ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்படாமல் இருப்பது, அரசுப் பள்ளிகளின் தரம் ஆகியவை பற்றி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்படும். காலிப் பணியிடங்களை நிரப்புவது பற்றியும் ஆலோசிப்போம். இறுதியில் இது தொடர்பான அறிவிப்பு கல்வித்துறை மூலம் வெளியாகும்.
தனியார் பள்ளிகளில் 75 சதவீதக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதலாக வசூலித்தால் எந்தப் பள்ளியாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் எவ்வித நடைமுறையைக் கடைப்பிடிப்பது என்பது பற்றி அதிகாரிகளிடம் பேசி அறிவிப்பை வெளியிடுவோம்" என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT