Published : 16 Jul 2021 01:15 PM
Last Updated : 16 Jul 2021 01:15 PM
மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று ஜேஇஇ மெயின் 4ஆம் கட்டத் தேர்வுத் தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டன. சிஐஎஸ்சிஇ வாரியமும் 10-ம் மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்தது. முதுகலை நீட் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
அதேபோல ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருந்த ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. நுழைவுத்தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும், தேர்வு நடத்தப்படுவதற்கு 15 நாட்கள் முன்பாகத் தேதிகள் அறிவிக்கப்படும் என தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்தது.
வழக்கமாக ஆண்டுதோறும் 4 முறை ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு மாணவர் 4 தேர்வுகளையும் எழுதலாம். அதில் பெறும் அதிகபட்ச மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருந்த தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஜேஇஇ 3-ம் கட்ட நுழைவுத்தேர்வு ஜூலை 20 முதல் 25 வரை நடத்தப்படும். 4-ம் கட்டத் தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடக்கும் என்று அறிவிப்பு வெளியானது.
3 மற்றும் 4-ம் கட்டத் தேர்வுக்கு இடையே 2 நாட்கள் மட்டுமே இடைவெளி இருப்பதாகவும், அதை நீட்டிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று ஜேஇஇ மெயின் 4ஆம் கட்டத் தேர்வுத் தேதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''மாணவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை ஏற்று ஜேஇஇ 3 மற்றும் 4ஆம் கட்டத் தேர்வுகளுக்கு இடையே 4 வார இடைவெளி வழங்க தேசியத் தேர்வுகள் முகமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 4ஆம் கட்ட நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜேஇஇ நான்காம் கட்டத் தேர்வுக்கு இதுவரை 7.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்'' என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களை www.nta.ac.in, jeemain.nta.nic.in என்ற இணையதளங்களில் அறியலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT