Published : 15 Jul 2021 06:43 PM
Last Updated : 15 Jul 2021 06:43 PM
மதுரை சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மத்திய அரசின் பங்களிப்புடன் அடல் டிங்கரிங் ஆய்வகம் இன்று மாணவர்களின் கற்பித்தல் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி கற்க நவீன ஆய்வகங்கள், வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. அந்த அடிப்டையில் மாநகராட்சி திருவிக மேல்நிலைப் பள்ளி, இளங்கோ மேல்நிலைப் பள்ளி, ஈ.வெ.ரா. நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ரோபோட்டிக் ஆய்வகம் அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் அதனைப் பயன்படுத்திக் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது அடுத்தகட்டமாக சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மத்திய அரசின் பங்களிப்புடன் அடல் டிங்கரிங் ஆய்வகம், மடிக்கணினிகள், 3டி புரொஜெக்டர்கள், பிரின்ட்டர்கள், கம்ப்யூட்டர் மென்பொருள்கள், ரோபோடிக்ஸ் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 550 மாணவ, மாணவியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்கள் மனதில் ஆர்வம், படைப்பாற்றல், கற்பனையை வளர்ப்பது, வடிவமைப்பு மனநிலை, கணக்கீட்டுச் சிந்தனை, தகவலமைப்பு கற்றல், இயற்பியல் கணினி, சுய கற்றல் முறை, நடைமுறைப் பயிற்சி மற்றும் நடைமுறைக் கல்விச் சூழ்நிலைகளில் மாணவர்களின் திறன் வெளிப்பாடு, பகுப்பாய்வு, தீர்வு வடிவமைப்பு, ஒத்துழைப்பு போன்ற பல்வேறு திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளும் விதமாக இந்தத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி சுந்தரராஜபுரம் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அடல் டிங்கரிங் ஆய்வகத்தை ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர் வளர்மதி, மாநகராட்சிக் கல்வி அலுவலர் பொ.விஜயா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT