Last Updated : 13 Jul, 2021 02:43 PM

4  

Published : 13 Jul 2021 02:43 PM
Last Updated : 13 Jul 2021 02:43 PM

அரசுப் பள்ளி மாணவர்களைத் தக்கவைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

திருச்சி

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களைத் தக்க வைத்துக்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் திருவெறும்பூர் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களைத் தொகுதி உறுப்பினரும், மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று சந்தித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''கடந்த ஒரு வாரத்துக்கு முன் எடுத்த கணக்கின்படி, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 3.40 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். நிகழாண்டு அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் என்பதும், அவர்களை அப்படியே தக்க வைத்துக்கொள்ளும் வகையில் அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி ஆசிரியர்களைப் போதிய எண்ணிக்கையில் நியமிப்பது தொடர்பாகவும், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களைத் தக்கவைத்துக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

நீட் தேர்வு கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் நாம் திட்டவட்டமாக உள்ளோம். அதேவேளையில், 2020, நவம்பர் 9-ம் தேதி முதல் நீட் தேர்வுக்கும், 2021, ஜனவரி 4-ம் தேதி முதல் ஜேஇஇ தேர்வுக்கும் ஆன்லைன் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் 17 சதவீதமாக உள்ள பள்ளி இடைநிற்றலை 5 சதவீதமாகக் குறைப்பதுதான் தமிழக அரசின் இலக்கு. பள்ளி இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறித்துக் கணக்கெடுப்பு நடத்த, துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பள்ளி இடைநிற்றலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

2013, 2017-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வெழுதிய பலர் வேலைக்குக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாகத் துறை உயர் அலுவலர்களுடன் ஏற்கெனவே கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x