Published : 12 Jul 2021 06:39 PM
Last Updated : 12 Jul 2021 06:39 PM
2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடத்தப்படும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். நாளை மாலை முதல் இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கரோனா பரவலால் கடந்த ஆண்டு நீட் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப்.13-ம் தேதி நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், அதுகுறித்து அரசு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இதற்காக மே 1-ம் தேதி தொடங்கப்பட வேண்டியிருந்த முன்பதிவும் தொடங்கப்படவில்லை.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை அடைந்த நிலையில் நாள்தோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். தினந்தோறும் 3 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டனர். கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டன. சிஐஎஸ்சிஇ வாரியமும் 10-ம் மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்தது. இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது.
இதற்கிடையே தேர்வு குறித்த அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் மத்திய அரசை வலியுறுத்தினர். இந்நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடத்தப்படும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும்.
இதற்கான விண்ணப்பப் பதிவு நாளை (ஜூலை 13) மாலை முதல் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2021-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 5-ம் தேதி நடத்தப்படும் என்றும், பேனா, காகித முறையில் இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் தேர்வு நடைபெறும் என்றும், தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால், அதற்கு தேசியத் தேர்வுகள் முகமை மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT