Published : 10 Jul 2021 03:07 PM
Last Updated : 10 Jul 2021 03:07 PM

சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவசத் தொழிற்பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021-2022ஆம் கல்வி ஆண்டுக்கான இலவசத் தொழிற்பயிற்சிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரடியாகச் சமர்ப்பித்துப் பயிற்சியில் சேரலாம் என, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூலை 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"சென்னை பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளின் எதிர்காலம் சிறக்க NCVT சான்றிதழ் உடன் கூடிய தொழிற்பயிற்சி கீழ்க்காணும் தொழிற் பாடப் பிரிவுகளில் அளிக்கப்படுகிறது.

சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளித்து, மீதி காலியாக உள்ள இடங்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவர்களை அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கை வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.

பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தின் சிறப்பு அம்சமானது முற்றிலும் இலவசப் பயிற்சி அளித்து ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச பஸ் பாஸ் மற்றும் பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ரூ.500 பயிற்சி உதவித்தொகையாக வழங்கப்படுகின்றது. மேலும், பயிற்சி முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு அரசாணையின்படி விலையில்லாமல் மடிக்கணினி வழங்கப்படும்.

2021-22ஆம் கல்வி ஆண்டுக்குத் தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பப் படிவத்தை சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவசமாகப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து நேரடியாகச் சேர்க்கை பெறலாம்.

மேலும், விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பைப் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள முகவரி www.chennaicorporation.gov.in அல்லது தொழிற்பயிற்சி நிலைய இணையதள முகவரி gccapp.chennaicorporation.gov.in/cciti/ மூலம் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ராயப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ்க்காணும் முகவரியில் நேரடியாகச் சமர்ப்பித்து சேர்க்கை பெறலாம்.

முகவரி:

சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம்,

முத்தையா தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, ஐஸ் அவுஸ்,

ராயப்பேட்டை, சென்னை-14.

தொலைபேசி எண் : 044 - 28473117.

(பேருந்து நிறுத்தம்: ஐஸ் அவுஸ் காவல் நிலையம் அல்லது எல்லோ பேஜஸ். )

மேலும், மாணவர்கள் பயிற்சியில் சேரும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

குழாய் பொருத்துநர் (Plumber) பாடப்பிரிவுக்கு 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். நேரடிச் சேர்க்கையின்போது அரசு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்து பயிற்சியில் சேருவதற்கான அனுமதி வழங்கப்படும்.

சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான இலவசத் தொழிற்பயிற்சியில் மாணவ/ மாணவிகள் சேர்ந்து பயனடையுமாறு, ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x