Published : 09 Jul 2021 04:40 PM
Last Updated : 09 Jul 2021 04:40 PM
மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்க பல்கலைக்கழகங்கள் பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தினார்.
மழைநீர் சேகரிப்பு குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் இணையவழிக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை, கருத்தரங்கத்திற்குத் தலைமை தாங்கினார். புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் குர்மீத்சிங் உட்படப் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கில் ஆளுநர் தமிழிசை பேசியதாவது:
"பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு நீரே ஆதாரமாக இருக்கிறது. ஆனால், முறையற்ற நீர் பயன்பாடு, நகரமயமாதல் போன்ற காரணங்களால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வறட்சி நிலவுகிறது. அதனால் மறுசெறிவூட்டி நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்க வேண்டியது நம்முடைய தலையாயக் கடமை.
தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு ஒரே வழி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் மழைநீரை முறையாகச் சேகரிப்பதும் நியாயமான வழிகளில் தண்ணீரைப் பயன்படுத்துவதுமே ஆகும். இந்தியாவில் மழைக் காலங்களில் பெருமளவு மழை பெய்கிறது. இதில் பெரும்பாலான மழைநீர் பயன்படாமலேயே வீணாகிறது.
நிலத்தடி நீரே நகர மற்றும் கிராமப்புறப் பகுதிகளின் தண்ணீர்த் தேவைக்கு பெரிய ஆதாரமாக இருக்கிறது. மழை நீரை நாம் முறையாகச் சேகரிக்கவில்லை என்றால் மிகப்பெரிய தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நிலத்தடி நீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் தண்ணீர் வளமிக்க நாடாக இந்தியாவை மாற்றவும் மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் என்ற திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது,
இதன் தாரக மந்திரம், "மழை எங்கு பெய்கிறது? எப்போது பெய்கிறது? அதைச் சேகரிப்போம்" என்பதுதான். சமுதாயத்தில் அனைத்துப் பிரிவினரும் "மழைநீர் சேகரிப்போம்" திட்டத்தில் இணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் இதில் முக்கியப் பங்காற்ற முடியும். தன்னார்வலர்களை இதில் பங்கெடுக்க வேண்டும்.
நாம் செய்ய வேண்டியவை எல்லாம் நம்முடைய வீடுகளில், அடுக்குமாடிகளின் மேற்பகுதிகளில், அலுவலகங்களில், வயல் வெளிகளில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியதுதான். மழைநீரைச் சேகரிக்க படுகைகள், அணைகளை ஏற்படுத்த வேண்டும். நீர்நிலைகளுக்கான வாய்க்கால் வழிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரி குளங்களைத் தூர்வார வேண்டும். கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளைச் செறிவூட்ட வேண்டும். நிலத்தடி நீர் மேம்பாடு, நகர் மற்றும் கிராமப்புறங்களில் நம்முடைய பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் மற்ற அதிகாரிகளும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைப்பதை ஊக்குவிக்க வேண்டும். மழைநீரைச் சேகரிப்பதோடு நீர் வீணாவதையும் தடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காகப் பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்."
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT