Last Updated : 08 Jul, 2021 06:31 PM

3  

Published : 08 Jul 2021 06:31 PM
Last Updated : 08 Jul 2021 06:31 PM

உயர் கல்வி டிஜிட்டல் மயமாக்கலால் மாணவர் சேர்க்கை உயரும்: கல்வி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

புதுடெல்லி

உயர் கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் கணிசமாக உயரும் என்று உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, மத்திய அரசு நிதி உதவியுடன் இயங்கும் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்ப நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்களிடம் காணொலி வழியாக இன்று பேசினார். நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள்/ தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் புதிதாக மத்திய கல்விக் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற தர்மேந்திர பிரதான், மத்திய கல்வி இணை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

’’உலகத்தில் மாறி வரும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பவும், வளர்ந்து வரும் சவால்களைக் கருத்தில் கொண்டும் உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியைப் பின்பற்ற வேண்டியது அவசியம். வருங்காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் ஆர்&டி (ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை) நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்க உள்ளன.

கல்வித்துறை, சுகாதாரம், விவசாயம், பாதுகாப்புத் துறை, சைபர் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு எதிர்காலத் தீர்வுகளை உருவாக்கும் வகையிலான கல்வியில் கவனம் செலுத்தவேண்டும்.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏராளமான சவால்களை எதிர்கொண்டோம். ஆனாலும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை நிறுவனங்கள் அதற்கேற்றவாறு துரிதமாகச் செயல்பட்டன. நிறைய இளம் கண்டுபிடிப்பாளர்கள் விரைவான தொழில்நுட்பத் தீர்வுகளை முன்வைத்தனர். அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.

அதேபோல இந்திய மொழிகளில் தொழில்நுட்பக் கல்வியின் முக்கியத்துவத்தை, அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம். சர்வதேச ஆய்விதழ்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்ய வேண்டும். இளைஞர்கள் மத்தியில் அறிவியலைப் பரவலாக்க வேண்டும். தேசத்தை ஆர்&டி துறையின் மையமாக மாற்ற வேண்டும்.

உயர் கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (ஜிஇஆர்) கணிசமாக உயரும். மாணவர்களும் சிறப்பான தரத்தில், கல்வியை மலிவாகப் பெறுவர்.

இந்தியா தனது நூறாவது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, அதாவது அடுத்த 25 ஆண்டுகளில் ஆத்மநிர்பார் பாரத் அபியான் பிரச்சாரம் இந்தியா கனவுகளையும் உத்வேகத்தையும் உருவாக்கி இருக்கும்’’.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x