Last Updated : 08 Jul, 2021 05:43 PM

 

Published : 08 Jul 2021 05:43 PM
Last Updated : 08 Jul 2021 05:43 PM

அரசுக் கல்லூரிகளில் இளநிலை,முதுகலை மாணவர் சேர்க்கை எப்போது? தனியாரில் அட்மிஷன் தொடங்கியதால் பெற்றோர் கலக்கம்

தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைத் தொடங்கியதால் அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடரும் சூழலில் ஆன்லைன் மூலமே மாணவர்கள் கல்வி கற்பதும், தேர்வுகள் எழுதுவதும் நடக்கிறது.

இதானால், இந்த கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகளில் மதிப்பெண் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. பிளஸ் 2 வகுப்புக்கு தேர்வின்றி, மதிப்பெண்கள் வழங்குவதில் தொடர்ந்து தாதமதம் ஏற்படுவதால் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை.

ஆனால், அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் மதிப்பெண் இன்றி, ஆன்லைன் வழியில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

இருப்பினும், ஜூலை இறுதிக்குள் பிளஸ்2 மதிப்பெண் வழங்கப்படும் என, அரசு நம்பிக்கை தெரிவிக்கும் நிலையில், ஆகஸ்டு மாதமே இளநிலை பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என, கல்லூரி முதல்வர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், கடைசி நேரத்தில் தங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை குறையலாம் என்ற அச்சத்தில் சில தனியார், அரசு உதவி பெறும் கல்லூரிகள் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறுகின்றன. அரசுக் கல்லூரிகளில் இது போன்ற நடைமுறையை பின்பற்றி விண்ணப்பிக்க முடியாமல் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் அரசுக் கல்லூரிகள் தவிர, அரசு உதவிபெறும், தனியார் கல்லூரிகளில் முதுநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளனர். ஒருசில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறை முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை வகுப்பில் விரும்பிய பாடப்பிரிவில் இனச்சுழற்சியில் சேர 6 செமஸ்டர்களுக்கான மதிப்பெண் சதவீதம் தேவை என்றாலும், ஏற்கெனவே மாணவர் சேர்க்கையை தொடங்கியதால் அதிக மதிப்பெண் பெற்று, விரும்பிய கல்லூரிகளில் விரும்பும் பாடப்பிரிவுகளில் சேருவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என, மாணவர்கள், பெற்றோர் தரப்பில் அச்சம் எழுந்துள்ளது.

இது குறித்து அரசு கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியது; அரசு கல்லூரிகளில் உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதல்படியே எந்த மாணவர் சேர்க்கையும் நடக்கும். இளநிலை, முதுகலை பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை குறித்த தகவல் வரவில்லை. ஜூலை 15ம் தேதி வரை மூன்றாமாண்டு, முதுநிலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடக்கிறது.

இதன்பின், விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, அதற்கான மதிப்பெண் வழங்கப்படும். இதனடிப்படையிலேயே முதுகலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கப்படுவர். தனியார் கல்லூரிகளில் அப்படி இல்லை.

5 வது செமஸ்டர் மதிப்பெண் அடிப்படையில் தற்போது, விரும்பிய முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்ந்தாலும், கூடுதல் மதிப்பெண் பெறுவோருக்கு அரசு ஒதுக்கீடு அடிப்படையில் சீட் வழங்கவேண்டும். ஒரு வேளை அரசு ஒதுக்கீடுக்கான ‘சீட் ’ களை நிலுவையில் வைத்துவிட்டு, நிர்வாக ஒதுக்கீட்டின்படி, மாணவர் சேர்க்கை நடத்தலாம்.

அரசுக் கல்லூரிகளில் இம்மாதம் இறுதியில் முதுநிலை வகுப்புகளும், ஆகஸ்டு முதல் வாரத்தில் இளநிலை வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடக்க வாய்ப்புள்ளது, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x