Published : 08 Jul 2021 02:20 PM
Last Updated : 08 Jul 2021 02:20 PM
திருச்சியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர், சிபிஎஸ்இ பள்ளியில் படித்த தனது மகளை அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்த்துள்ளார்.
ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் வீதியில் கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியான இதன் தலைமை ஆசிரியர் சைவராஜ். இவர், நல்லாசிரியர் விருது பெற்றவர்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், கடந்த வாரம் ஆசிரியர் சைவராஜ், பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் சிலருடன் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இசைக் குழுவினருடன் வீதி வீதியாகச் சென்று தமிழ்வழிக் கல்வி மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய கற்பித்தல் மற்றும் தமிழ்வழிக் கல்வியில் பயில்வதன் மூலம் மாணவர்களுக்கு அரசு அளிக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்த நிலையில், சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வந்த மகள் யாழினியைத் தனது பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் 1-ம் வகுப்பில் சேர்த்தார்.
இது தொடர்பாக ஆசிரியர் சைவராஜ் கூறும்போது, "தமிழ்வழிக் கல்வி மாணவர் சேர்க்கையை மேம்படுத்தவும், தமிழ்வழிக் கல்வி மூலம் மாணவர்களுக்குக் கிடைக்கும் அரசின் நலத் திட்டங்கள், பயன்கள் ஆகியன குறித்து நானும், எங்கள் பள்ளி ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறோம்.
இந்த நிலையில், பிறருக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் சிபிஎஸ்இ பள்ளியில் படித்த எனது மகளையும் தமிழ்வழிக் கல்வியில் சேர்த்துள்ளேன். என் நண்பர்களின் குழந்தைகளையும் தமிழ்வழிக் கல்வியில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளேன். இன்று ஒரே நாளில் மட்டும் தனியார் பள்ளியில் இருந்து விலகி 7 பேர் எங்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT