

கிராமக் குழந்தைகளுக்கு இடம் கிடைக்காததால், புதுச்சேரி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் சிவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடங்க முயற்சி எடுத்துள்ளதாகப் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஜிப்மர் வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்குச் சென்று இன்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளி முதல்வர் ஜோஸ் மேத்யூ, "இப்பள்ளியில் 25 சதவீத இடங்கள் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தரப்படுகின்றன. மீதியுள்ள இடங்கள் ஜிப்மர், மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்களுக்குத் தரப்படுகின்றன. புதுச்சேரியில் மேலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் திறந்தால் சிறப்பாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து எம்.பி. வைத்திலிங்கம் கூறுகையில், "கேந்திரிய வித்யாலயா பள்ளியில் குறைவான இடங்களே உள்ளதால் கிராமக் குழந்தைகளுக்கு ஒரு இடம் கூடக் கிடைப்பதில்லை. எனவே, கிராமப் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியைக் கொண்டுவர வேண்டும்.
மாநில அரசின் ஒத்துழைப்புடன் மத்திய அரசிடம் பேசி, மாவட்ட நிர்வாகத்தின் கீழ் ஒரு சிவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடங்க முயல்கிறேன். இது தொடர்பாகக் கல்வித்துறை இயக்குநரிடம் ஆலோசனை நடத்தியுள்ளேன்" என்று தெரிவித்தார்.