Last Updated : 05 Jul, 2021 02:17 PM

 

Published : 05 Jul 2021 02:17 PM
Last Updated : 05 Jul 2021 02:17 PM

மழலைகளுக்கு ஆக்டிவிட்டி புத்தகங்கள், க்ரேயான், சார்ட்டுகள்: கேரள அமைச்சர் அறிவிப்பு

திருவனந்தபுரம்

கரோனா தொற்றுச் சூழலில் தொலைக்காட்சி மற்றும் இணைய வசதி இல்லாத மழலைகளுக்கு ஆக்டிவிட்டி புத்தகங்கள், க்ரேயான், சார்ட்டுகள் உள்ளிட்டவை அடங்கிய கல்வி உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்படும் என்று கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்றுக் காலத்தில் மழலையர் பள்ளிகள் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் அவர்களுக்கு ஏற்றதாக இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இதற்கிடையே அத்தகைய வகுப்புகளுக்கான வசதிகள் இல்லாமலும் குழந்தைகளின் கற்றல் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள மாநில சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், தொலைக்காட்சி மற்றும் இணைய வசதி இல்லாத மழலைகளுக்கு ஆக்டிவிட்டி புத்தகங்கள், க்ரேயான், சார்ட்டுகள் உள்ளிட்டவை அடங்கிய கல்வி உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தொலைக்காட்சி மற்றும் இணைய வசதி இல்லாமல் மாநிலத்தில் மொத்தம் 14,102 மழலைகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கல்வி உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்படும். இதற்கு முன்னோட்டமாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் குலசேகரபதி பகுதியில் உள்ள ஒரு குழந்தைக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் விரைந்து மழலைகள் அனைவருக்கும் வழங்கப்படும்.

முன்னதாக சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் சார்பில் விக்டர் சேனலில் 'கிளிக்கொஞ்சல்' என்ற மழலையர் நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்ட நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொலைக்காட்சி இல்லாமலோ, அதற்கான அலைவரிசை கிடைக்காமலோ அந்த நிகழ்ச்சியைக் காண முடியாத மழலையர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x