Published : 01 Jul 2021 02:03 PM
Last Updated : 01 Jul 2021 02:03 PM
விழுப்புரம் அருகே மனச்சோர்வால் முடிகளைப் பிய்த்துச் சாப்பிட்ட பள்ளி மாணவி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆட்சியருக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.
விழுப்புரம் அருகே 15 வயதுப் பள்ளி மாணவி கரோனா ஊரடங்கால் ஆன்லைன் வகுப்பில் பாடங்களைப் படித்து வந்துள்ளார். பெற்றோர்கள் இருவரும் பணிக்குச் சென்ற நிலையில், அவர் வீட்டில் பாட்டியுடன் இருந்துள்ளார். தனிமையில் ஆன்லைன் வகுப்புகளில் படித்து வந்துள்ளதால் அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு வயிற்று வலி, வாந்தி எனப் பெற்றோர்களால் அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவரை மருத்துவர் ராஜமகேந்திரன் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவரின் வயிற்றில் கட்டி ஒன்று இருப்பதைக் கண்டறிந்து, அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார். அக்கட்டி முடிகளைப் பிய்த்துச் சாப்பிட்டதால் உருவானது எனக் கண்டறியப்பட்டது. இந்நோயை மருத்துவத் துறை Rapunzel Syndrome எனப் பெயரிட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்துச் சிறுமி, பெற்றோர்கள் மூலம் மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் செய்தி இந்து தமிழ் இணையதளத்திலும், நாளிதழிலும் வெளியானது.
இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நேற்று விழுப்புரம் ஆட்சியர் மோகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், அச்சிறுமிக்கு அளிக்கப்பட்ட மனநல ஆலோசனைகள், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT