Published : 01 Jul 2021 01:05 PM
Last Updated : 01 Jul 2021 01:05 PM
மோட்டார் வாகன ஆய்வாளர் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வது குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு- 2) பதவியில் காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் பொறியியல் டிப்ளமோ படிப்பு, கனரக வாகனப் பணி அனுபவம், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவை இப்பணிக்கான அடிப்படை தகுதிகள். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 226 விண்ணப்பதாரர்களும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் (நிலை 2) 2013 - 2018 பதவிக்கான நேர்முகத் தேர்வு கரோனா வைரஸ் தொற்று காரணமாகத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
மேற்கூறிய பதவிக்கான நேர்முகத் தேர்வு ஜூலை 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை (ஜூலை 21 தவிர) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். மேற்கூறிய நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளத் தகுதி பெற்ற 226 விண்ணப்பதாரர்களுக்கும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் தேதி மற்றும் நேரம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியில் சேருவோர்தான் பிறகு மண்டலப் போக்குவரத்து அதிகாரியாக (ஆர்.டி.ஓ.) பதவி உயர்வு பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT