Published : 29 Jun 2021 07:27 PM
Last Updated : 29 Jun 2021 07:27 PM
மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் வகையில் பெண்கள் பள்ளிகள் இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆய்வு செய்தார். அதையடுத்துச் செய்தியாளர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
''மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் வகையில் பெண்கள் பள்ளிகள் இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சிசிடிவி வசதி அமைத்துத் தர வேண்டும் என்று சில பள்ளிகள் கேட்டுள்ளன. இதுகுறித்தும் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வோம்.
அரசு சார்பில் நாப்கின் மற்றும் நாப்கின் எரியூட்டிகள், தேவைப்படும் பள்ளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி மாணவர் சேர்க்கை அதிக அளவில் உள்ளதால், அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு மட்டுமின்றி, ஆங்கிலவழிக் கல்வி போதிக்கும் ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை ஜூலை 31-ம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர்களுக்கு வழக்கமாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்வு நடைபெறும். தனித் தேர்வர்களுக்குத் தேர்வு நடைபெறும்போது, அரசு வழங்கும் பிளஸ் 2 மதிப்பெண்கள் போதாது என்று கூறுபவர்களும் தேர்வெழுதலாம். கரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்தால்தான் இந்த திட்டம். இல்லையெனில், அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும்.
எந்தக் காலகட்டத்திலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வை நுழையவிட மாட்டோம் என்பதே திமுக அரசின் கொள்கை. நீட் தேர்வைத் தடுக்க எந்தெந்த வழிவகை உள்ளதோ அதை முன்னெடுப்போம். நீட் தேர்வு விவகாரத்தில், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பட்ஜெட் கூட்டத் தொடரின்போது முதல்வர் உரிய முடிவை எடுப்பார்''.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT