Published : 26 Jun 2021 04:48 PM
Last Updated : 26 Jun 2021 04:48 PM

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு; 10-ம் வகுப்பு மதிப்பெண்களுக்கு முதல்வர் முக்கியத்துவம் அளித்தது ஏன்?- அமைச்சர் விளக்கம்

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டு முறையில் 10-ம் வகுப்பு மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தது ஏன் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

''கரோனா தொற்றால் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர், 3 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு தனது மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிக்கையை அளித்தது.

அனைவரும் ஒன்றிணைந்து 12 முறைகளைப் பரிந்துரைத்தனர். அனைவரும் அதைக் கலந்து பேசி விவாதித்து, இரண்டு முறைகளாகக் குறைத்தோம். அவை இரண்டையும் முதல்வர், தலைமைச் செயலாளர், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளி கல்வித்துறை இயக்குநர் ஆகியோருக்குச் சமர்ப்பித்தோம். இதையடுத்து முதல்வர் அதில் இருந்து ஒரு முறையை இறுதி செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் இருந்து 50% மதிப்பெண்களும், 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் இருந்து 20% மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் இருந்து 30% மதிப்பெண்களும் எடுத்துக்கொள்ளப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏன் பத்தாம் வகுப்புக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, 50 சதவீத மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று நீங்கள் கேட்கலாம். பெருந்தொற்று இல்லாத காலத்தில் மாணவர்கள் நேரடியாக பள்ளிக்குச் சென்று பாடங்களைப் பயின்று, நேரடியாகத் தேர்வை எழுதிப் பெற்ற மதிப்பெண்கள் அவை. ஆனால் கடந்த ஆண்டு மார்ச் 23-ல் இருந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.

முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதனால் பதினொன்றாம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்கு 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைப் பொறுத்தவரை மாணவர்கள் பெற்ற அதிகபட்ச மதிப்பெண்களின் (3 பாடங்கள்) சராசரியே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களைக் கருத்தில் கொண்டு இந்த முறையை நான் தேர்ந்தெடுக்கிறேன் என்று முதல்வர் தெரிவித்தார். அத்துடன் நன்றாகப் படிக்கும் மாணவர்கள், சுமாராகப் படிப்பவர்கள் என அனைவரையும் கருத்தில் கொண்டே இந்த முறையைத் தேர்வு செய்ததாகவும் முதல்வர் கூறினார்''.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon