Published : 25 Jun 2021 02:14 PM
Last Updated : 25 Jun 2021 02:14 PM
பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு முறை தொடர்பாகவும், கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாகவும் துறை அமைச்சர்களிடம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், இந்த ஆண்டு 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை தொடர்பாகக் குழு அமைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சிபிஎஸ்இ வாரியத்திலும் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், 12-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைக்குக் கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதற்கிடையே அனைத்து மாநிலக் கல்வி வாரியங்களும், 10 நாட்களுக்குள்ளாக மதிப்பெண் கணக்கீட்டு முறையை இறுதி செய்து உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல அக மதிப்பீட்டு முறையை இறுதி செய்து, ஜூலை 31-ம் தேதிக்குள் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று (ஜூன் 24) உத்தரவிட்டது.
இதையடுத்து பிளஸ் 2 மாணவர்களின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களைச் சரிபார்த்து, அதனைத் தேர்வுதுறை இணையதளத்தில் ஜூன் 30-ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என்று அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இந்த மதிப்பெண் பட்டியலை மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநரிடமும் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு முறை தொடர்பாகவும், கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரிடமும் முக்கிய கல்வித்துறை அதிகாரிகளிடமும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை, தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. கூட்டத்தின் முடிவில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT