Published : 25 Jun 2021 01:37 PM
Last Updated : 25 Jun 2021 01:37 PM

சிபிஎஸ்இ மதிப்பெண் கணக்கீடு: மாணவர்களின் சந்தேகங்களுக்கு இன்று பதிலளிக்கிறார் அமைச்சர் பொக்ரியால்- நீட், ஜேஇஇ குறித்தும் அறிவிக்க வாய்ப்பு

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கீட்டு முறை குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளிக்கிறார். இன்று மாலை நேரலையாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் குறித்தும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது குறித்து முடிவு செய்யக் குழு அமைக்கப்பட்டது.

குழு அறிக்கையில், 12-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல தனித் தேர்வர்களுக்கும் தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதும் மாணவர்களுக்கும் மீண்டும் பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். கரோனா சூழல் சீரடைந்த பிறகு அந்தத் தேர்வுகள் நடக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்தது. இந்த நடைமுறைக்கு உச்ச நீதிமன்றமும் ஒப்புதல் வழங்கியுள்ளது. எனினும் இதற்கு மாணவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே பல்வேறு கல்வி வாரியங்களும் சிபிஎஸ்இ மாணவர்களும் பெற்றோர்களும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும் மதிப்பெண் கணக்கீட்டு முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியும் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் மாணவர்களின் சந்தேகங்களைப் போக்கும் வகையில் அவர்களுடன் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துரையாடுகிறார். இன்று மாலை அமைச்சரின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளில் நேரலையாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’சிபிஎஸ்இ பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கீட்டு முறை தொடர்பாக மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளேன். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள், பரிந்துரைகள் இருந்தால் அதை என்னுடைய ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளில் பகிர்ந்து கொள்ளலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாணவர்கள் சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை குறித்துத் தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இன்று மாலை நடைபெற உள்ள நேரலை உரையாடலில் இதுவரை தேர்வுத் தேதி அறிவிப்பு வெளியாகாத நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் குறித்தும் அமைச்சர் தகவல்களைப் பகிர வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x