Last Updated : 24 Jun, 2021 03:39 PM

 

Published : 24 Jun 2021 03:39 PM
Last Updated : 24 Jun 2021 03:39 PM

நடப்புக் கல்வியாண்டிலும் 75% கல்விக் கட்டணம்: புதுவை தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

புதுச்சேரி

நடப்புக் கல்வியாண்டிலும் கட்டணக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும். பள்ளிகளை மீண்டும் திறக்கும் வரை பேருந்துக் கட்டணம், சீருடைக் கட்டணம் உள்பட அனைத்து இதர கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என்று முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தொற்றுநோய் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்கால உத்தரவுப்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் 2020-21ஆம் கல்வியாண்டுக் கட்டணமாக, 2019-20ஆம் கல்வியாண்டுக்கான கட்டணக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் 75 சதவீதம் மட்டும் கட்டணமாக வசூலிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நடப்புக் கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தைத் தனியார் பள்ளிகள் வசூலிக்கத் தொடங்கின. அதில் புதுச்சேரி, காரைக்காலில் தெளிவான நடைமுறைகள் இல்லாததால் பெற்றோர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், "கரோனா சூழலைக் கருத்தில்கொண்டு அனைத்துத் தனியார் பள்ளிகளும் 2021- 22ஆம் கல்வியாண்டுக்கான கட்டணமாக, பெற்றோரிடமிருந்து 2019- 20ஆம் கல்வியாண்டுக்காகக் கட்டணக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும். இதை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் வசூலிக்கலாம்.

அத்துடன் வருடாந்திரக் கட்டணம், பேருந்துக் கட்டணம், சீருடைக் கட்டணம், கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கை கட்டணம், நூலகக் கட்டணம், ஆய்வகக் கட்டணம், விளையாட்டு மற்றும் நுண்கலைக் கட்டணம், மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுக்கான கட்டணம் போன்ற வேறு எந்த கட்டணத்தையும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கும் வரை வசூலிக்கக் கூடாது" என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழகப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும், ஆந்திரப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஏனாம், கேரளப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் மாஹே மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் கல்வித்துறை இப்புதிய உத்தரவை இன்று அனுப்பியுள்ளது. அதன்படி தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x