Published : 23 Jun 2021 07:41 PM
Last Updated : 23 Jun 2021 07:41 PM
ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு எழுத அனுமதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 25% உள் ஒதுக்கீடு, நீட் தேர்வை எதிர்க்க பிற மாநில அரசுகளின் ஆதரவு திரட்டல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை ரவிக்குமார் எம்.பி. வழங்கியுள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழுவிடம் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் அளித்துள்ள ஆலோசனைகள்:
''மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்த இந்தியா முழுமைக்குமான பொது நுழைவுத் தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் 2010ஆம் ஆண்டு பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் 2012ஆம் ஆண்டு ’நீட்’ (NEET) நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், 90 மருத்துவக் கல்லூரிகள் அதை ஏற்கவில்லை. தாமே தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்திக்கொண்டதோடு உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தன. உச்ச நீதிமன்றமும் இந்திய மருத்துவக் கவுன்சில் ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்துவிட்டது.
2013ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் ’நீட்’ நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான இந்திய மருத்துவக் கவுன்சிலின் குறிப்பாணை ரத்து செய்யப்பட்டது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. தான் வழங்கிய தீர்ப்பைச் சீராய்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றமும் ஒப்புக்கொண்டது. புதிதாக அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
இந்தியா முழுவதற்கும் ஒரே சீராக நுழைவுத் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில்தான் மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும் என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. அந்தச் சூழலில் நீட் தேர்வுக்கு எதிராக 2017இல் அன்றைய அதிமுக அரசு இரண்டு சட்டங்களை இயற்றியது. ஆனால், அந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க முடியாது எனக் குடியரசுத் தலைவர் 18.09.2017 அன்று நிராகரித்துவிட்டார்.
நீட் தேர்வை ரத்து செய்வதில் உறுதியாக இருக்கும் தற்போதைய திமுக அரசு மீண்டும் அதற்காக சட்டம் இயற்ற முடியுமா? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் (concurrent list) உள்ளதால் தமிழக அரசு அதில் சட்டம் இயற்றுவதற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்தின் அதே பொருள் தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தின் மூலம் ஒரு சட்டத்தை இயற்றுமெனில் மத்திய அரசு இயற்றும் சட்டமே செல்லுபடியாகும் என அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 254-ன் உட்பிரிவு 1 கூறுகிறது. ஆனால், உட்பிரிவு 2-ல் அதற்கு ஒரு விதிவிலக்கைத் தந்திருக்கிறார்கள்.
“பொதுப் பட்டியலில் உள்ள ஒரு பொருள் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றியதன் பிறகு அதே பொருள் தொடர்பாக மாநில அரசு சட்டம் ஒன்றை இயற்றி அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுவிட்டால் அந்த மாநிலத்தில் அந்தச் சட்டம் செல்லுபடியாகும்” என அதில் விளக்கம் அளித்துள்ளனர். இந்த உட்பிரிவின் விளக்கத்தில் உள்ளதுபோல தமிழ்நாடு நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றால் தமிழ்நாட்டில் நீட் தேர்வை இல்லாமல் செய்துவிடலாம். அப்படி செய்தாலும் அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யவோ அதை ரத்து செய்யவோ மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.
நீட் தேர்வு விஷயத்தில் மாநில அரசு சட்டம் இயற்ற வாய்ப்பிருக்கிறதா என்பதைப் பற்றி நீதிபதி அனில் தவே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு 2016 மே மாதம் 9ஆம் தேதி அளித்த தீர்ப்பிலேயே விளக்கம் தந்திருக்கிறது:
“மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை இரண்டு அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது.
முதல் அம்சம்: குறைந்தபட்ச கல்வித் தர அளவுகோல்களை நிர்ணயித்தல், அதை ஒருங்கிணைத்தல் – இது அதிகாரப் பட்டியல் 1 ( மத்திய அரசின் அதிகாரம் ) இன் 66 ஆவது பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது.
இரண்டாவது அம்சம்: அந்தத் தர அளவுகோல்களை நடைமுறைப்படுத்துதல். இது அதிகாரப் பட்டியல் 3இன் ( பொதுப்பட்டியல் ) 25ஆவது பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பிரிவின் கீழ் மாநிலங்களும் சட்டம் இயற்றலாம். இந்த இரண்டு பிரிவுகளும் ஒன்றோடொன்று சற்றே முரண்படலாம். அப்போது பட்டியல் 3இன் பிரிவு 25இல் சொல்லப்பட்ட அதிகாரத்தைவிட பட்டியல் 1இன் பிரிவு 66இல் சொல்லப்பட்ட அதிகாரமே செல்லுபடியாகும்’’ என்று அந்தத் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
நீட் நுழைவுத் தேர்வு பற்றி மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தபோது அதில் ஓராண்டு காலம் அந்த நுழைவுத் தேர்வை நடத்துவதிலிருந்து மாநிலங்கள் சிலவற்றுக்கு விலக்களித்திருந்தது. அந்த அவசரச் சட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் நடைமுறை மீது உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்தது.
“2016 மே 9ஆம் தேதி இந்த நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்குப் பிறகும்கூட பல மாநிலங்கள் அதை அலட்சியம் செய்துவிட்டு தமது தேர்வுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது நல்லதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் அவசரச் சட்டம் தேவையற்றது. மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகள் தேவையில்லையென இந்த நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அதை மதிக்காமல் நீங்கள் அவசரச் சட்டம் பிறப்பிக்கிறீர்கள் “ எனக் கடிந்துகொண்டது.
உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், ”இந்த நீதிமன்றம் பிறப்பித்த அந்த ஆணையை மீற நினைத்திருந்தால் நீட் நுழைவுத் தேர்வையே மத்திய அரசு ரத்து செய்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை” என்று கூறினார்.
இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தால், தற்போது தமிழ்நாடு அரசு நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டம் இயற்றினாலும் அதற்கு 2017இல் அதிமுக அரசு இயற்றிய சட்டத்தைப் போலவே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல் போகலாம். ஏனென்றால் அப்படி ஒப்புதல் அளிக்க மத்திய அரசு சம்மதிப்பது நீட் தேர்வு குறித்த உச்ச நீதிமன்ற ஆணையை ரத்து செய்வதாகவே பொருள்படும். அப்படிச் செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை எனத் தலைமை வழக்கறிஞர் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அப்படியே குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்தாலும் இந்தச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கக்கூடும். ஏற்கெனவே நீட் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள பல்வேறு தீர்ப்புகளும் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.
நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும்போது அது எவ்வாறு சமத்துவமான வாய்ப்பை மறுக்கிறது என்பதை நீதிபதி பி.கலையரசன் குழு தனது அறிக்கையில் ஆதாரங்களோடு எடுத்துக் கூறியுள்ளது. பல்வேறு கல்வி வாரியங்களின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு; மாணவர்கள் சார்ந்துள்ள சமூகக் குழுக்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு; பெற்றோர்களின் வருமானம் அவர்களது கல்வி முதலானவற்றால் ஏற்படும் ஏற்றத்தாழ்வு; பயிற்றுமொழி காரணமாக ஏற்படும் ஏற்றத்தாழ்வு; பாலின ஏற்றத்தாழ்வு, அரசுப் பள்ளிகளுக்கும் -தனியார் பள்ளிகளுக்கும், கிராமப்புறப் பள்ளிகளுக்கும் - நகர்ப்புறப் பள்ளிகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு எனப் பல்வேறு அம்சங்களை அது சுட்டிக் காட்டியிருக்கிறது.
அதன் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு அது பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட கடந்த அதிமுக அரசு, 7.5% உள் ஒதுக்கீட்டை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறது. மேலே விவரிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் ஆலோசனைகளை இந்த ஆணையத்தின் பரிசீலனைக்காக முன்வைக்கிறேன்:
நீட் தேர்வு ரத்து செய்யப்படும்வரை தமிழக அரசு செய்ய வேண்டியவை:
1. தற்போது எம்பிபிஎஸ் படிப்பில் சேர்கிற மாணவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பலமுறை தேர்வு எழுதி ( Repeaters) இடத்தைப் பெற்றவர்களாக உள்ளனர். முதல் முறை தேர்வு எழுதுபவர்களுக்கும் தனிப்பயிற்சியில் ஒரு சில ஆண்டுகள் படித்து மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுகிறவர்களுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. அப்படித் தேர்வு எழுதுவது பண வசதியுள்ள குடும்பத்தினருக்கு மட்டுமே சாத்தியம். எனவே, ஒருமுறை மட்டுமே தேர்வு எழுதமுடியும் என்ற நிலையைக் கொண்டு வர வேண்டும்.
2. தமிழ் வழியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் அதிகம் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது. அரசுப் பள்ளிகளில்தான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தமிழ் வழியில் படிக்கின்றனர். எனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டை குறைந்தபட்சம் 25% ஆக உயர்த்த வேண்டும்.
3. நீட் தேர்வு மதிப்பெண்கள் குறைவாக இருக்கும் மாணவர்களையும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பணம் வாங்கிக்கொண்டு சேர்த்துக்கொள்வதே மருத்துவக் கல்வியின் தரம் குறைவதற்கு முதன்மையான காரணம். எனவே தமிழ்நாட்டில் இனிமேல் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என்ற கொள்கை முடிவைத் தமிழக அரசு எடுக்கவேண்டும்.
4. நீட் தேர்வு முற்றாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்தில்லை. ஆனால், அதை மத்திய அரசுதான் செய்ய முடியும் என்ற நிலையில் அதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, மத்திய அரசுக்குத் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். நாடாளுமன்றத்தில் அதற்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து போராட தமிழக அரசு முன்முயற்சி எடுக்கவேண்டும்.
5. நீட் தேர்வு மாநில உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. எனவே, தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற தனது நிலைப்பாட்டுக்கு ஆதரவாகப் பிற மாநில அரசுகளின் ஆதரவைத் திரட்ட வேண்டும். அதற்காக பாஜக அல்லாத மாநில முதல்வர்களின் கூட்டம் ஒன்றைத் தமிழக முதல்வர் உடனடியாகக் கூட்ட வேண்டும் என இந்த ஆணையம் பரிந்துரை செய்யவேண்டும்''.
இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT