Published : 20 Jun 2021 04:11 PM
Last Updated : 20 Jun 2021 04:11 PM
படிப்பதற்கான வருமானத்திற்காக தையல் இயந்திரம் கேட்ட பிளஸ் 2 மாணவிக்கு தையல் இயந்திரம் வழங்கி, மேற்கொண்டு படிப்பதற்கான செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று உறுதியளித்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் குன்னம் எம்எல்ஏ-வும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர், எம்எல்ஏ கிளை அலுவலகத்தை அண்மையில் திறந்து வைத்தார்.
அப்போது, செந்துறை ராயல் சிட்டி பகுதியில் வசிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர் சமுதாயத்தைச் சேர்ந்த பிளஸ் 2 முடித்த மாணவி சந்திரா, மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதாகவும், மேற்படிப்பு செலவுக்காக தையல் இயந்திரம் வழங்கினால் உதவியாக இருக்கும் என, சிவசங்கரிடம் மனு அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், "மேற்படிப்பு செலவை நானே ஏற்கிறேன். படிக்கிறாயா?" என, மாணவியிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், இன்று (ஜூன் 20) மாணவியின் வீட்டுக்கு சென்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாணவி சந்திராவிடம் தையல் இயந்திரத்தை வழங்கி, மேற்படிப்புக்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தார்.
இது குறித்து, மாணவி சந்திரா கூறும்போது, "கடந்த 2019 -20 ஆம் ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 371 மதிப்பெண்கள் பெற்று இருந்த நிலையிலும், படிக்க வசதி இல்லாததால் கடந்த ஆண்டு கல்லூரியில் சேரவில்லை.
ஆனால், தற்போது படிப்பதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க உள்ளேன். எனக்கு படிப்பதற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டு, மேலும் குடும்ப வருமானத்திற்காக தையல் இயந்திரம் வழங்கிய அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT