Published : 17 Jun 2021 01:20 PM
Last Updated : 17 Jun 2021 01:20 PM
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 31 அன்று வெளியாகும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ள நிலையில், மாணவர்களுக்குக் குறை தீர்க்கும் மையம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதையடுத்து சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவை எந்த முறையில் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வுசெய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவில் மத்திய கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் இணைச் செயலர் விபின் குமார், மத்திய கல்வி இயக்குநர் உதித் பிரகாஷ் ராஜ், கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஆணையர் நிதி பாண்டே, நவோதயா வித்யாலயா சமிதி ஆணையர் விநாயக் கார்க் உட்பட 12 பேர் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழு தனது அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
அதில், மாணவர்களின் 12-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக அறிய: சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்படி?- முழு விவரம்
மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது:
3 வகுப்புகளிலும் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்ட தேர்வு முடிவுகளில் ஒரு மாணவரால் தேர்ச்சி அடைய முடியவில்லை என்றால் அவர் மீண்டும் மறு தேர்வுப் பிரிவில் வைக்கப்படுவார். (essential repeat அல்லது compartment பிரிவு).
மீண்டும் பொதுத் தேர்வு
தனித் தேர்வர்களுக்கும் தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதும் மாணவர்களுக்கும் மீண்டும் பொதுத் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். கரோனா சூழல் சீரடைந்தபிறகு அந்தத் தேர்வுகள் நடக்கும்.
மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப் பள்ளிகளுக்கு உதவி
மதிப்பெண் கணக்கீடு செய்வதில் பள்ளிகளுக்கு சந்தேகம் எழுந்தால் அதை நிவர்த்தி செய்யும் வகையில், சிபிஎஸ்இ சார்பில் உதவி மையம் அமைக்கப்படும். அதேபோல மதிப்பெண்களை அறிவிப்பதில் மென்பொருள் உதவி உள்ளிட்ட, தேவைப்படும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும். பிளஸ் 2 தேர்வுக்குப் பதிவு செய்திருந்த 14.5 லட்சம் மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள், ஜூலை 31-ம் தேதி அன்று அறிவிக்கப்பட உள்ளன.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
சிபிஎஸ்இ தாக்கல் செய்த மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும் முறையைத் தனது இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களுக்குத் தனி குறை தீர்க்கும் மையம்
எனினும் மாணவர்களுக்குத் தனி குறை தீர்க்கும் மையம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சிபிஎஸ்இ வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியானபிறகு அதில் திருத்தம் தேவைப்படும் மாணவர்களுக்காக அவை அமைக்கப்பட வேண்டும். மீண்டும் விருப்பத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT