Published : 14 Jun 2021 02:56 PM
Last Updated : 14 Jun 2021 02:56 PM
நீட் தேர்வால் பாதிப்பு இருப்பதால்தான் அரசு குழு அமைத்திருக்கிறது என, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், அவர் உட்பட 9 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 10 அன்று உத்தரவிட்டார்.
இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில், "மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றைச் சரிசெய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்துள்ளது.
அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (ஜூன் 14) அக்குழுவின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்குழுவின் தலைவர் ஏ.கே.ராஜன், "நீட் தேர்வு குறித்த முக்கியமான தரவுகள் தேவைப்படுகின்றன. தமிழ்வழிக்கல்வி மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வு செய்து தரவுகளின் வழி அறிக்கை தாக்கல் செய்வோம்.
குழுவில் உள்ள உறுப்பினர்கள் எல்லோருடைய கருத்தும் நீட் தேர்வால் பாதிப்பு இருக்கிறது என்பதுதான். பாதிப்பு இல்லை என்று சொல்ல முடியாது. பாதிப்பு இருப்பதால்தான் அரசு குழு அமைத்திருக்கிறது. எவ்வளவு தூரம் பாதிப்பு என்பதைத்தான் நாங்கள் ஆய்வு செய்வோம். ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிப்போம்.
மாணவர்களுக்கு தற்போது நீட் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து நாங்கள் கருத்து சொல்ல முடியாது. அடுத்த திங்கள்கிழமை மீண்டும் ஆலோசனை நடத்துவோம். இடைக்கால அறிக்கைகள் அளிக்க மாட்டோம். இறுதி அறிக்கை மட்டுமே அளிப்போம்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT