Published : 12 Jun 2021 02:21 PM
Last Updated : 12 Jun 2021 02:21 PM
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர் சேர்க்கை வரும் 21ஆம் தேதி தொடங்கி ஜூலை 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 2021-22 கல்வியாண்டில் பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேர்வதற்கான சேர்க்கை முடிவுகள் இன்று (ஜூன் 12) வெளியிடப்பட்டன. இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், துபாய், குவைத், மஸ்கட், கத்தார், பஹரைன், சிங்கப்பூர், மொரீஷியஸ் உட்பட 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்தத் தேர்வு தொடர்பாக விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் கூறுகையில், ''விஐடியில் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். வரும் ஜூன் மாதம் 21ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 16ஆம் தேதி வரை 4 கட்டங்களாகக் கலந்தாய்வு நடைபெறும்.
ஜூன் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் தரவரிசை 1 முதல் 20,000 வரையும், ஜூன் 30 மற்றும் ஜூலை 1-ஆம் தேதிகளில் தரவரிசை 20,001 முதல் 45,000 வரையும், ஜூலை 8 மற்றும் 9ஆம் தேதிகளில் தரவரிசை 45,001 முதல் 70,000 வரையும், ஜூலை 15 மற்றும் 16ஆம் தேதி தரவரிசை 70,001 முதல் ஒரு லட்சம் வரையில் இருப்பவர்களுக்குக் கலந்தாய்வு நடைபெறும்.
தரவரிசை 1 முதல் ஒரு லட்சம் வரையிலான மாணவர்களுக்கு விஐடி வேலூர், சென்னை, ஆந்திரப்பிரதேசம் மற்றும் போபால் வளாகங்களில் இடம் கிடைக்கும். ஒரு லட்சத்துக்கும் மேலாகத் தரவரிசை பெற்ற மாணவர்களுக்கு விஐடி ஆந்திரப்பிரதேசம் மற்றும் விஐடி போபாலில் மட்டும்தான் இடம் கிடைக்கும்.
மாணவர் சேர்க்கை முடிவுகளை https://admissionresults.vit.ac.in/viteee என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், விஐடி இணையதளம் வழியாக ஆன்லைன் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம். ஜி.வி, பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்புக் கல்வி உதவி, மத்தியக் கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவிலான முதலிடம் பெற்றவர்களுக்கு விஐடியில் பி.டெக். படிப்பின் 4 ஆண்டுகளும் 100 சதவீதப் படிப்பு கட்டணச் சலுகையும், தர வரிசையில் 1 முதல் 50 வரை இடம் பெற்றவர்களுக்கு 75 சதவீதப் படிப்பு கட்டணச் சலுகையும், தரவரிசையில் 51 முதல் 100 இடம் பெற்றவர்களுக்கு 50 சதவீதக் கட்டணக் சலுகையும், தரவரிசை 101 முதல் 1,000 இடம் பெற்றவர்களுக்கு 25 சதவீத படிப்பு கட்டணக் சலுகையும் ஜி.வி பள்ளி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
அதேபோல், ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு விஐடியில் 100 சதவீதக் கல்வி கட்டணச் சலுகையும், இலவச விடுதி வசதி, உணவு வசதி, விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும்.
விஐடியில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகள் மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை www.vit.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT