நீட் மூலம் துணை மருத்துவப் படிப்புகள் சேர்க்கை: ஜிப்மரில் இனி தனி நுழைவுத் தேர்வு இல்லை

நீட் மூலம் துணை மருத்துவப் படிப்புகள் சேர்க்கை: ஜிப்மரில் இனி தனி நுழைவுத் தேர்வு இல்லை

Published on

இந்தக் கல்வியாண்டு முதல் புதுச்சேரி ஜிப்மரில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் மதிப்பெண் அடிப்படையில் நடக்க உள்ளது. தனியாக நுழைவுத் தேர்வை ஜிப்மர் நடத்தாது. அதே நேரத்தில் கலந்தாய்வை ஜிப்மர் தனியாக நடத்தும். அதில் பங்கேற்க ஜிப்மர் இணையத்தில் தனியாகப் பதிவு செய்யவேண்டும்.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவஹர்லால் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஎச்டி மற்றும் மருத்துவம் சார் படிப்புகள் உள்ளன. ஜிப்மரில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்குத் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு முதல் இந்த நுழைவு தேர்வு ரத்தாகி, நீட் கலந்தாய்வு முறையில் சேர்க்கை முறை அமலானது.

எனினும் நர்சிங் மற்றும் மருத்துவம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளான பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்பிஎச், பிஜிடி, பிஜிஎப், பிபிடி மற்றும் பிஎச்டி படிப்புகளுக்கு ஜிப்மர் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தி வந்தது.

இந்நிலையில் இக்கல்வியாண்டில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கு (Bsc Nursing and Allied Health Science Courses) நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஜிப்மர் தரப்பில் விசாரித்தபோது, "2021-ம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நீட் தேர்வின் (இளங்கலை) அடிப்படையில் இருக்கும்.

பிஎஸ்சி படிப்புகளுக்கு ஜிப்மரில் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படாது. அதே நேரத்தில் இப்படிப்புகளுக்கான கலந்தாய்வை ஜிப்மர் தனியாக நடத்தும். இதற்குத் தனியாக ஜிப்மர் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பான விவரங்கள் இணையத்தில் பகிரப்படும். கூடுதல் விவரங்களுக்கு ஜிப்மர் இணையதள முகவரியான www.jipmer.edu.in-ஐக் காணலாம்" என்று தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in