Published : 09 Jun 2021 06:30 PM
Last Updated : 09 Jun 2021 06:30 PM
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.டெக். கணக்கீட்டு உயிரியல் (கம்ப்யூட்டேஷனல் பயாலஜி) படிப்புக்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்று, மத்திய உயிரித் தொழில்நுட்பவியல் துறையிலிருந்து ரூ.5.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுவைப் பல்கலைக்கழகத்தின் உயிர் தகவலியல், உயிர் அறிவியல் துறை சமர்ப்பித்த எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் பயாலஜி (2020-25) திட்டத்துக்கு மத்திய அரசின் உயிரித் தொழில்நுட்பவியல் துறையிலிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து ரூ.5.1 கோடி நிதியை புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கும் முடிவுக்கு மத்தியக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், மையத் தலைவர் பேராசிரியர் ஏ.தினகர ராவ் கூறும்போது, "எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் பயாலஜி முதுகலை பட்டப்படிப்புக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மாதத்துக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இதில் இடம்பெறத் தேசிய அளவிலான உயிரித் தொழில்நுட்பவியல் (GAT -B) தேர்வில் தகுதி பெற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மொத்த 30 இடங்களுக்குச் சேர்க்கை GAT-B மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும். மேலும் இதர இட ஒதுக்கீடு இந்திய அரசின் விதிமுறைகளின்படி இருக்கும்.
இந்திய அரசாங்கத்தின் உயிரித் தொழில்நுட்பவியல் துறையால் அனுமதிக்கப்பட்ட எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் பயாலஜி திட்டத்தை இந்திய அளவில் வழங்கும் மூன்று பல்கலைக்கழகங்களில் புதுவை பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இங்கு 11 ஆசிரியர்கள் சர்வதேச ஆராய்ச்சி அனுபவத்துடன் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
கணினி அறிவியல், உயிரித் தொழில்நுட்பவியல், நுண்ணுயிரியல் மற்றும் மருந்தியல் ஆகியவற்றின் நிபுணத்துவத்துடன் இணைந்த இடைநிலைப் படிப்புகளை இம்மையம் வழங்குகிறது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT