Published : 02 Jun 2021 07:43 PM
Last Updated : 02 Jun 2021 07:43 PM
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடர்பாக நாளை ஆன்லைன் மூலம் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்தலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது தொடர்பாகக் கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கருத்து கேட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கரோனா காலத்தில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்துப் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தொலைபேசி எண், இமெயில் முகவரி ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.
அந்த அறிக்கையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நாளை (ஜூன் 2) இணைய வழியிலான கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும். கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் கூட்டம் குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் உள்ளூர்ப் பகுதிகளில் உள்ள பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டு அறிக்கை தயாரிக்க வேண்டும். இந்த அறிக்கையை ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நாளை (ஜூன் 3) மாலைக்குள் அறிக்கையைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கைகளின் அடிப்படையில் இது தொடர்பாக முதல்வருடன் நாளை மாலையே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். அதன்பிறகு நாளை மாலை அல்லது ஜூன் 4ஆம் தேதி காலை பொதுத் தேர்வு குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT