Published : 02 Jun 2021 12:43 PM
Last Updated : 02 Jun 2021 12:43 PM

பிளஸ் 2 தேர்வு; கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு 2 நாட்களில் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி

சென்னை

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்தலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது தொடர்பாகக் கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கருத்து கேட்கப்படும். இரண்டு நாட்களுக்குள் கருத்து கேட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். கரோனா சூழலில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே மத்திய அரசு சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை நடத்துவது தொடர்பாக எடுக்கும் முடிவை ஒட்டி தமிழகத்தில் பிளஸ் 2 நடத்துவது குறித்து அறிவிப்பதாக அரசு தெரிவித்திருந்தது.

சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா என்பது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்குப் பிறகு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:

''மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களின் உடல் நலனும் பாதுகாப்பும் முக்கியம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நேற்று இரவு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், பிற மாநிலங்கள் தேர்வு குறித்து என்ன முடிவு எடுக்கப் போகின்றன என்பதைக் கவனிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்யலாமா அல்லது நடத்தலாமா என்பது தொடர்பாகக் கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கருத்து கேட்கப்படும். இரண்டு நாட்களுக்குள் கருத்து கேட்ட பின்னர் முடிவு செய்யப்படும்.

கலவையான கருத்துகள்

இதுகுறித்துக் கல்வியாளர்கள், ஆசிரியர் அமைப்புகள் ஆலோசனைகளை அளிக்க துறை இ-மெயில் முகவரி அளிக்கப்படும். ஊடகங்களும் தங்களுடைய அறிவுரைகளை அளிக்க வேண்டுகிறேன். அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும். 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரின் பெற்றோர்களிடமும் இரண்டு நாட்களுக்குள் கருத்து கேட்பது சாத்தியமில்லை. அதனால் அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து கருத்து கேட்க முடிவு செய்துள்ளோம். மாணவர்கள் சிலர் தேர்வு வேண்டும், வேண்டாம் என்று கலவையான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.

12-ம் வகுப்புத் தேர்வு மதிப்பீடு அவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாக உள்ளது. எனினும் அவர்களது உடல் நலமும் முக்கியமானது என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டியுள்ளது.

இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார்

ஏற்கெனவே மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளீர்கள், ஏன் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய மறுக்கிறீர்கள்? புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவரப் பார்க்கிறீர்களா என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது அவரது கருத்தாக உள்ளது. இது போன்ற எல்லோருடைய கருத்துகளையும் கணக்கில் கொண்டு ஆராய்ந்து, முடிவு எடுக்கப்படும். தேர்வு குறித்த இறுதி முடிவை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்''.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x